ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து இதுவரை 217 விசைப்படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருக்கிறது.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பறிமுதல் செய்த விசைப் படகுகளை இலங்கை அரசு ஏலம் விட்டது. அதில் 130-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நீண்ட காலமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுக் கிடந்ததால் அவை பழுதாகின. அதனால், யாழ்ப்பாணத்தில் உள்ள பொம்மை வெளியில் உள்ள திறந்தவெளி பணிமனையில் பழுதான படகுகள் பிரித்து எடுக்கப்படும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இலங்கையில் கடுமையான சமையல் எரிவாயு தட்டுப்பாடு, விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் படகிலிருந்து பிரித்து எடுக்கப்படும் மரப்பலகைகள் இலங்கை மக்களுக்கு விறகாக விற்கப்பட்டு வருகின்றன.
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு ஏலம் விட்டதற்குத் தமிழக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து மண்டபம், ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தங்கச்சிமடத்தில் மத்திய, மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் சேசு நம்மிடம் பேசினார். “கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு, இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஏலம் விட்ட தகவல் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தற்போது படகுகள் உடைக்கப்பட்டு விறகுகளாக விற்கப்படுவது வேதனையளிக்கிறது.
மேலும், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
வருகிற 12-ம் இலங்கை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள அவர்களை விடுதலை செய்ய வேண்டும். விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பாத மண்டபத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை மீட்க வேண்டும். மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எப்போதுதான் ஏற்படும் என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் மீனவர்கள் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல் காலம் தாழ்த்தி வருவது கவலையளிக்கிறது” என்றார்.