சட்ட சபையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான கொள்கை விளக்கக் குறிப்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது, “மத அடிப்படைவாதிகள் மற்றும் ரவுடிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதில் கடுமையான அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. நடப்பாண்டில் பதிவான 723 போக்சோ வழக்குகளில் 86 வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளது.
மற்ற வழக்குகளில் நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. தாம்பரம் காவல் ஆணையரகம் அமைப்பதற்கு நிலம் ஒதுக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது.டிஜிட்டல் மயமாக்கல், இணைய வசதிகள் மற்றும் கைப்பேசிகளின் பரவலான பயன்பாடு, இணையதள குற்றங்கள் வேகமாக அதிகரிக்க காரணமாக உள்ளது.
2011ம் ஆண்டு இணைய தள குற்ற புகார்களின் எண்ணிக்கை 748 ஆக இருந்த நிலையில் 2021ம் ஆண்டு 13 ஆயிரத்து 77 ஆக அதிகரித்துள்ளது. இணைய தள குற்ற வழக்குகளில் வெளி நாட்டினர் ஈடுபடுவதால் குற்றவாளிகளை கைது செய்தல் மற்றும் களவுபோன சொத்துக்களை மீட்டெடுத்தல் மிகப்பெரும் சவாலாக உள்ளது.
சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளில் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்கள், மாநகரங்களில் மாவட்ட ஆட்சியர்களால் மாவட்ட சாலை பாதுகாப்பு குழுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. மாவட்ட அதிகாரிகள் மூலம் ஒவ்வொரு முக்கிய சாலையிலும் சாலை பாதுகாப்பு தணிக்கை நடத்தப்படும். போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குறும்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில் போதைப்பொருள் நுண்ணாய்வு பிரிவிற்கு என தனியாக மூன்று மோப்ப நாய்கள் புதிதாக வாங்கப்பட்டு தற்சமயம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மியான்மர் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் உரிய ஆவணங்கள் இன்றி குடியேறியுள்ள 88 ரோஹிங்கியா இனத்தவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் தங்க வைக்கப்பட்டு தவறான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் 2022ம் ஆண்டுக்குள் விரைந்து முடிவிற்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிலை திருட்டு தடுப்புப் பிரிவினரால் சிலை கடத்தல் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் 300 உலோகச் சிலைகளை முப்பரிமாண வீடியோ படங்கள், சென்னை ஐ.ஐ.டி. மற்றும் திருநெல்வேலி இந்துக் கல்லூரியின் உதவியுடன் ஒரு முன்னோடி திட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு சிலை திருட்டு தடுப்புப் பிரிவு வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை ஆகிய துறை அலுவலர்களை கொண்ட ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து சிலைகளையும் ஆவணப்படுத்தி அவற்றின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது” என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.