எல்லா டிவி சேனல்களிலும் புதுப்புது சீரியல்கள் வந்தாலும், இன்றைக்கும் மக்கள் மத்தியில் நிலைத்திருக்கும் கிளாசிக் சீரியல்கள் மனதை விட்டு நீங்குவதில்லை. அப்படி பழைய சீரியல்களின் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, கோலங்கள், தென்றல் சீரியல் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளன.
இந்தியாவில் வேறு எந்த பிராந்திய மொழிகளை விட தமிழ் மொழியில் அதிக அளவில் பொழுதுபோக்குத் தொலைக்காட்சி சேனல்களும் செய்திச் சேனல்களும் பெருகிவிட்டன. பொழுதுபோக்கு தொலைக்காட்சியில் அது தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை, தொலைக்காட்சிரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று கவர்ந்து இழுப்பது சீரியல்கள்தான்.
தமிழ்நாட்டில் சன் டிவி தொடங்கப்பட்டபோது, 2000களில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்கள் இன்றைக்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளன.
சன் டிவியில் 2003 முதல் 2009 வரை ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற கோலங்கள் சீரியல்கள் பற்றி இன்றைக்கு சீரியல் ரசிகர்கள் பேசுகிற ஒரு சீரியலாக உள்ளது.
கோலங்கள் சீரியலின் கதை அபி மற்றும் அவளைச் சுற்றியுள்ளவர்களால் மாறும் அவளுடைய வாழ்க்கையைச் சுற்றி நடப்பதாக இருந்தது.
அதே போல, 2000களின் இறுதியில் தொடங்கி 2015 வரை ஒளிபரப்பான மற்றொரு பிரபலமான சீரியல் தென்றல் சீரியல் பற்றியும் ரசிகர்கள் இன்றைக்கும் பேசுகிறார்கள்.
தென்றல் சீரியலின் கதை தீபா, துளசி மற்றும் கல்யாணி ஆகிய மூன்று நண்பர்களைப் பற்றியது. அவர்கள் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். திருமணத்திற்குப் பிறகு அவர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறுகிறது இதுதான் தென்றல் கதை.
கிளாஸிக் சினிமாக்களைப் போல, இந்த கிளாஸிக் சீரியல்களை எப்போது பார்க்க முடியும் என்று டிவி சீரியல் ரசிகர்கள் பலரும் ஏக்கத்தில் இருந்தனர். 1200 எபிசோடுகளைத் தாண்டி ஒளிபரப்பான கோலங்கள், தென்றல் போன்ற பிரபலமான சீரியல்களை மீண்டும் ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில்தான், பிரபல டிவி சீரியல்களான கோலங்கள் (2003-2009) மற்றும் தென்றல் (2009-2015) ஆகியவை மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கோலங்கள், தென்றல் ஆகிய 2 கிளாசிக் சீரியல்களும் மே 16 ஆம் தேதி முதல் மதியம் 1 மணிக்கும் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஒளிபரப்பப்படும் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“