மாஸ்கோ,
2ம் உலக போரில் ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகளுக்கு எதிராக ரஷியா போரிட்டது. இந்த போரில் ஜெர்மனியை ரஷியா வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனை நினைவுகூரும் வகையில் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மே 9ந்தேதி ராணுவ அணிவகுப்பு நடைபெறும்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள சூழலிலும், இந்த ஆண்டு வெற்றி நாள் கொண்டாட்டங்களி நடந்தன. அதன்படி, இன்று ராணுவ அணிவகுப்பு நடந்தது. இதில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு பேசினார்.
இந்த 2ம் உலக போரில் ரஷிய தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். இதனை முன்னிட்டு போரில் உயிரிழந்த தங்களுடைய முன்னோர்களின் நினைவாக, அவர்களது புகைப்படங்களை கைகளில் சுமந்தபடி, ரஷியர்கள் பலர் மாஸ்கோ நகர சாலையின் வழியே பேரணியாக சென்றனர்.
இதில், ஆடவர், மகளிர், முதியோர் மற்றும் குழந்தைகள் என வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். சிலர் பேரணியை தங்களுடைய செல்போனில் புகைப்படம் எடுத்தபடியும் சென்றனர். ஒரு சிலர் ரஷிய கொடியையும் சுமந்தபடி சென்றனர்.
இந்த பேரணியில் தம்பதி ஒன்று தங்களுடைய குழந்தையை தள்ளுவண்டியில் வைத்து அழைத்து கொண்டு, முன்னோர்களின் புகைப்படங்களை இரு கைகளில் சுமந்தபடி நடந்து சென்றனர்.