போபால்:
மத்திய பிரதேசம் உஜ்ஜயின் மாவட்டத்தில் உள்ள தனியார் வாகன காப்பகத்தில் வேலை பார்ப்பவர் லோகேந்திரா சோதியா. இவர் அம்மாநில உள்துறை மந்திரி நரோட்டம் மிஷ்ராவிற்கு கடிதம் எழுதினார். அதில் குறிப்பிட்ட ஒரு மதுபான கடையில் இருந்து மது வாங்கி அருந்தினால் போதை ஏற மறுக்கிறது. இதனால் அந்த கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 2 குவார்ட்டர் பாட்டில்களை வாங்கி குடித்ததாகவும், ஆனால் மதுவில் போதை ஏறவில்லை என்றும், இதனால் அதிகாரிகள் அந்த கடையில் சோதனை செய்ய வேண்டும் என்றும் கேட்டிருந்தார். இந்த புகார் கடிதத்தை அவர் உள்ளூர் கலால் துறை அதிகாரிகளுக்கும், மாநில மந்திரிக்கும் அனுப்பியிருந்தார்.
இதேபோல மத்திய பிரதேசம் தரோட் கிராமத்தை சேர்ந்த ஜித்தேந்திரா பக்ரி என்பவர் காவல்துறையினருக்கு ஒரு புகார் அளித்திருந்தார். அதில் தன்னுடைய 180 ரூபாய் மதிப்புள்ள கருப்பு செருப்பு ஒன்று காணாமல் போய்விட்டது என்றும், ஒருவேளை அந்த செருப்பு கொலை, கொள்ளை குற்றம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டால் அந்த சம்பவத்திற்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என முன்கூட்டியே தெரிவிப்பதாக கூறியிருந்தார்.