அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.77.41-ஆக சரிவடைந்ததையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய பா.ஜ.க அரசை விமர்சித்து வருகின்றன. இந்திய ரூபாயின் இந்த சரிவு கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத ஒன்று என காங்கிரஸ் கூறியிருந்தது. இந்த நிலையில், பிரதமர் மோடியை, நாட்டின் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துமாறு, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ட்விட்டரில் விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக ராகுல் தனது ட்விட்டரில், “மோடி ஜி, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையும்போது நீங்கள் மன்மோகன் ஜியை விமர்சித்தீர்கள். தற்போது எப்போதும் இல்லாத அளவுக்கு, ரூபாயின் மதிப்பு குறைந்திருக்கிறது. ஆனால், கண்மூடித்தனமாக நான் உங்களை விமர்சிக்க மாட்டேன். நமது பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துங்கள், ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் அல்ல” எனப் பதிவிட்டிருக்கிறார்.