திருப்பூர் : தொங்குட்டிபாளையம் ஊராட்சி 7-வது வார்டு கவுன்சிலர் கார்த்திகா குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் 2பேர் வீடு மற்றும் நிலத்தை போலியாக ஆவணம் தயாரித்து அபகரிக்க முயற்சி செய்ததால் தற்கொலை செய்ய முயற்சி என தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அடுத்த தொங்குட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் – கார்த்திகா. தம்பதி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். தொங்குட்டிபாளையம் ஊராட்சி 7-வது வார்டு கவுசிலராக கார்த்திகா உள்ளார்.
இன்று கார்த்திகை தனது கணவர் ஆனந்தகுமார், குழந்தைகளுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது திடீரென கையில் வைத்திருந்த மண்எண்ணை கேனை கொண்டு கார்த்திகா தன் மீதும், கணவர், குழந்தைகள் மீதும் மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் 4 பேர் மீது தண்ணீரை ஊற்றினர்.
வெளியான தகவலின்படி, கார்த்திகா தனது வீடு, நிலத்தை அபகரிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி தீக்குளிக்க முயன்றதாக தெரியவந்துள்ளது.
மேலும் மாவட்ட ஆட்சியரிடம் அவர் அளித்த மனுவில், “தொங்குட்டிபாளையம் பகுதியில் 8 சென்ட் நிலம் மற்றும் வீட்டுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறோம். எங்கள் ஊரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் 2பேர் எங்களது வீடு மற்றும் நிலத்தை போலியாக ஆவணம் தயாரித்து அபகரிக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.