தாமஸ் கோப்பை போட்டி; இந்திய பேட்மிண்டன் குழு காலிறுதிக்கு தகுதி

பாங்காக்,
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் தாமஸ் கோப்பை 2022 பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் இந்திய அணி 2வது குழு போட்டியில் தொடக்கத்தில் இருந்தே வெற்றியை நோக்கி பயணித்தது.
முதல் போட்டியில் உலக தர வரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஸ்ரீகாந்த் கிதம்பி, கினடாவின் பிரையான் யாங்கை எதிர்கொண்டார்.  இந்த போட்டியில் முதல் செட்டை 22-20 என யாங் வெற்றி பெற்றார்.  எனினும், அடுத்தடுத்து திறமையாக விளையாடிய ஸ்ரீகாந்த் 21-11 மற்றும் 21-15 என்ற செட் கணக்கில் வெற்றியை தன்வசப்படுத்தினார்.

இதன்பின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி, ஜேசன் அந்தோணி ஹோ-ஷு மற்றும் கெவின் லீ ஜோடியை எதிர்கொண்டது.  இதில் 21-12, 21-11 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி எளிதில் வெற்றி பெற்றது.
அடுத்த போட்டியில் இந்தியாவின் எச்.எஸ். பிரணாய் மற்றும் பி.ஆர். சங்கீர்த் ஆகியோர் விளையாடினர்.  இதில் தொடக்கம் முதலே சிறப்புடன் விளையாடிய பிரணாய் 21-15, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
4வது போட்டியில், இந்திய ஜோடியான கிருஷ்ண பிரசாத் மற்றும் விஷ்ணுவர்தன், ஆடம் டாங் மற்றும் யகுரா நைல் ஜோடியுடன் விளையாடியது.  இந்த போட்டியில், இந்திய ஜோடி 21-15, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் பின்பு 5வது போட்டியில், இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் மற்றும் விக்டர் லாய் விளையாடினர்.  20 வயதுடைய பிரியன்ஷு முதல் செட்டை 21-13 என கைப்பற்றினார்.  ஆனால், 2வது செட்டை 20-22 என்ற கணக்கில் லாய் கைப்பற்றினார்.  இதனால் போட்டியின் வெற்றியை முடிவு செய்ய கூடிய 3வது செட்டில் பிரியன்ஷு அதிரடியாக விளையாடி 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று போட்டியையும் தன்வசப்படுத்தினார்.
இதனால், இந்திய அணி 5-0 என்ற புள்ளி கணக்கில் கனடாவை வீழ்த்தியது.
இந்திய அணி நேற்று நடந்த ஜெர்மனியுடனான குழு போட்டியில் 5-0 என வெற்றி பெற்று இருந்தது.  இதனால், காலிறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.