கொழும்பு :இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது, பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, நாடு முழுதும் கலவரம் மூண்டது. இதில், 130 பேர் காயம் அடைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போலீசாருக்கு உதவ, ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது. நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, மகிந்த ராஜபக்சே, 76, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். கலவரத்தில், ஆளுங்கட்சி எம்.பி., மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் பலியாகினர். மகிந்த ராஜபக்சே மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் பலரது வீடுகள் எரிக்கப்பட்டன.
அழுத்தம்
நம் அண்டை நாடான இலங்கையில், அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது; பெட்ரோல் – டீசல், மருந்து, மின்சாரம் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. பொறுமை இழந்த மக்கள் கடந்த மாதம் 9ம் தேதி முதல், சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலக வலியுறுத்தினர். ஆனால், பதவியை ராஜினாமா செய்ய மகிந்த மறுத்தார். ஆளும் பொதுஜன பெருமுன கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.,க்களே, பிரதமர் மகிந்தவுக்கு எதிராக திரும்பினர். இதனால் அழுத்தம் அதிகரித்தது.
இந்நிலையில், அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக பார்லி.,யில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய, எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.இதற்கிடையே, கடந்த 6ம் தேதி நடந்த சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில், இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்து அதிபர் கோத்தபய உத்தரவிட்டார். இதையடுத்து நாட்டில் பதற்றம் அதிகரித்தது. அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இந்நிலையில், போராட்டம் நடந்து வந்த மைனகோகாமா, கோத்தகோகாமா மற்றும் கலே பேஸ் கிரீன் பூங்கா பகுதியில், பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள், பேருந்துகளில் நேற்று வந்திறங்கினர்.
ராஜினாமா
அரசை எதிர்த்து போராடுவோர் மீது, அவர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்கள் திருப்பி தாக்கினர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல காட்சி அளித்தது. கலே பேஸ் பூங்கா பகுதியில் போலீசார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில், 23 பேர் காயம் அடைந்தனர். மைனகோகாமா மற்றும் கோத்தகோகாமா பகுதியில் நடந்த கலவரத்தில், 130 பேர் காயம் அடைந்தனர்.உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசாருக்கு உதவ ராணுவம் வரவழைக்கப்பட்டது. மறுஅறிவிப்பு வரும்வரை, போலீசாருக்கு வழங்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்பட்டன. ‘மக்கள் அமைதி காக்க வேண்டும்’ என, ராணுவ செயலர் வேண்டுகோள் விடுத்தார்.ஆனால், நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, மகிந்த ராஜபக்சே தன் பிரதமர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்கிறேன்.
கடந்த 6ம் தேதி நடந்த சிறப்பு அமைச்சரவை கூட்டத்தின் போது, அனைத்து கட்சியினரையும் உள்ளடக்கிய இடைக்கால அரசை அமைக்க நீங்கள் விருப்பம் தெரிவித்ததை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளேன்.தற்போது சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு விடுபட, எவ்வித தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கிடையே, பிரதான எதிர்கட்சியான சமகி ஜன பாலவேகயா தலைவர் சஜித் பிரேமதாசா, கலவரம் மூண்ட கோத்தகோகாமா பகுதியில் நிலைமையை ஆய்வு செய்ய நேரில் சென்றார்.
தீ வைப்பு
அங்கு குழுமியிருந்த மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள், சஜித் பிரேமதாசா மீது தாக்குதல் நடத்தினர். கடும் போராட்டத்துக்கு பின் அவர், அங்கிருந்து பத்திரமாக வெளியேறினார்.இதற்கிடையே, இலங்கை அமைச்சரவை கலைக்கப்பட்டதாகவும், பெரும்பாலான அமைச்சர்கள் ராஜினாமா செய்து விட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நடந்த சம்பவம் காரணமாக, இலங்கை முழுதும் கலவரம் பரவியுள்ளது. ஆளும் கட்சி எம்.பி.,க்கள், மேயர், நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். சில இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன. அரசு ஆதரவாளர்களை ஏற்றி வந்த வாகனங்களுக்கும் சில இடங்களில் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஆறு பேர் காயம் அடைந்தனர். நாடு முழுதும் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விமான பயணியருக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கலவரம் மூண்டுள்ளதால் பதற்றம் நீடிக்கிறது.
எம்.பி., தற்கொலை!
இலங்கையின் வட மேற்கு நகரமான நித்தம்புவா என்ற இடத்தில், ஆளும் பொதுஜன பெருமுன கூட்டணியை சேர்ந்த எம்.பி., அமரகீர்த்தி அதுகோலராவின் காரை அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது, காரில் இருந்து துப்பாக்கியால் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் ஒன்று சேர்ந்த காரை தலைகீழாக கவிழ்த்தனர். காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிய எம்.பி., அமரகீர்த்தி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர், அருகில் இருந்த கட்டடத்தில் பதுங்கினர். அந்த கட்டடத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாது என்பது தெரிந்ததும், துப்பாக்கியால் சுட்டு எம்.பி., தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவரது பாதுகாப்பு அதிகாரியும் இறந்து கிடந்தார்.
மகிந்த வீட்டுக்கு தீ வைப்பு
இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் குருணாகல என்ற பகுதியில் உள்ள மகிந்த ராஜபக்சேவின் பூர்வீக வீட்டை, போராட்டக்காரர்கள் நேற்று இரவு கல்வீசி தாக்குதல் நடத்தியதுடன் தீ வைத்தனர். இதில் அந்த வீடு தீப்பற்றி எரிந்தது. மகிந்த உட்பட அவரது குடும்பத்தினர் கொழும்பு நகரில் உள்ள வீட்டில் வசிக்கின்றனர். கிராமத்து வீட்டில் வேலைக்காரர்கள் மட்டும் இருந்தனர். அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இது தவிர, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆளுங்கட்சி பிரமுகர்களின் வீடுகளுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.