புதுடில்லி-ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான புதிய சட்டத்திற்கு எதிரான வழக்குகளை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க, உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஊடகங்களில் வெறுப்புணர்வை துாண்டும் பிரசாரங்களை தடுக்கும் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு எதிராக ஏராளமான மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி கூறியதாவது:புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட நடவடிக்கைகளுக்கு, சில மாநிலங்களின் உயர் நீதிமன்றங்கள் இடைக்கால தடை விதித்துள்ளன. அவற்றை எதிர்த்து மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் வரை, அது தொடர்பான புதிய உத்தரவுகளை பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஏற்ற அமர்வு, புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்கவும், புதிய மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் உயர் நீதிமன்றங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
Advertisement