“கனிமொழி ஆதரவாளன் என்பதால் திமுகவில் புறக்கணிக்கப்பட்டேன்; கனிமொழியையும் ஒதுக்கி வருகிறார்கள்; தமிழ்நாட்டின் எதிர்காலம் இனி பாஜக கையில்தான் இருக்கிறது” என்று பற்பல காரணங்களையும் உள்ளரசியலையும் அடுக்கிறார் பாஜகவில் இணைந்த சூர்யா சிவா.
நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவராகவும், திமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவரது மகன் சூர்யா சிவா. இவர், திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அந்தக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட சூர்யா சிவாவுடன் ஒரு பேட்டி…
திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைய என்ன காரணம்?
“அப்பாவுக்கும் எனக்குமே பல விரிசல்கள் உள்ளன. அப்பா – மகனுக்குள் பிரச்சினை இருக்கிறது என்பதாலேயே அங்கீகாரம் கிடைக்கவில்லை. கனிமொழி ஆதரவாளன் என்பதால் எம்.எல்.ஏ சீட்டு மறுக்கப்பட்டது. ஆளுங்கட்சியில் இருந்துகொண்டு ஆதாயம் தேடலாம் என பலரும் சொல்வார்கள். ஆனால், இனியும் திமுகவில் இருந்த பயனில்லை என முடிவெடுத்தேன். உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கும் ஓர் இடத்திற்கு செல்லலாம் என முடிவெடுத்தேன். அந்த வகையில் இப்போது இருக்கும் கட்சிகளில் பாஜக தமிழகத்தில் வளர்ந்துகொண்டு வருகிறது. அதனால் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துவிட்டேன்.”
அப்பாவுக்கும், உங்களுக்கும் என்னதான் பிரச்சினை?
“எனக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிவிட்டன. என் மனைவி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். பள்ளி, கல்லூரி என்றெல்லாம் காதலிக்கவில்லை. எனது அப்பாவுக்கு பேராசிரியராக இருந்தவர்தான் என் மாமியார். அந்த வகையில், என் மனைவி பிஎச்டி கைடாக வீட்டிற்கு வந்தார். குடும்பத்துடன் நன்கு பழகி வந்தார். அப்படித்தான் நாங்கள் காதலித்தோம். இந்த காதலில் என் அப்பாவுக்கு விருப்பமில்லை. என் மனைவி கருவுற்றிருக்கும்போது, கூட ஆட்களை வைத்து அவரை மிரட்டினார்கள். இதை வெளியில் தெரியப்படுத்திதான் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். சொத்துகள் எதுவும் கொடுக்கமாட்டோம் என்று கூறி முற்றிலுமாக எங்களைப் புறக்கணித்துவிட்டனர். மற்றபடி, அவரால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. சொல்லப்போனால், பயன் இருக்ககூடிய இடத்திலும் கூட அவர் பெயரால் எனக்கு பிரச்சினைதான் வந்தது.”
மாற்று மதத்தவரை திருமணம் செய்ததால்தான் அப்பா எதிர்த்தாரா?
“ஆமாம். நான் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததுதான் அவருக்கு பிரச்சினை. அதற்குத்தான் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். நான் இந்த விவகாரத்தை வெளியில் கொண்டுவந்தபோது, ஒரு நாளிதழுக்கு அப்போது என் தந்தை அளித்த பேட்டியில், என் மனைவி என்னைவிட 3 வருடம் வயதில் மூத்தவராக இருப்பதால் எதிர்க்கிறேன் என்று சொன்னார். அதற்கு என்னிடம் பத்திரிகையில் விளக்கம் கேட்டபோது, ‘அதற்கு நானோ என் மனைவியோ தான் வருத்தப்பட வேண்டும். இவர் வருத்தப்பட வேண்டிய தேவையில்லை. நேரடியாக மதம்தான் பிரச்சினை என நேரடியாக சொல்ல முடியாத காரணத்தால் இப்படி மழுப்புகிறார்’ என்றேன்.”
கனிமொழி ஆதரவாளராக இருந்ததால் கட்சியில் புறக்கணிக்கப்பட்டேன் என்று கூறினீர்கள். அப்படி என்ன புறக்கணிப்பு கட்சியில் உங்களுக்கு நடந்தது?
“எல்லா வகையிலும் புறக்கணிக்கப்பட்டேன். கட்சியில் எனக்கு நல்ல மரியாதையும், அங்கீகாரத்தையும் கொடுத்தவர் கனிமொழி. அதனால் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தேன். அவரது புகைப்படத்தை வைத்திருந்ததால், அவரது ஆதரவாளராக கருதப்பட்டேன். எனக்கு திருமணம் செய்து வைத்தது, எனது பிரச்சினைகளை வெளியில் கொண்டு வர உதவியது, என் குழந்தைக்கு பெயர் வைத்தது எல்லாமே கனிமொழிதான். நான் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி குறித்து மட்டும் குற்றம் சொல்கிறேன் என காலையிலிருந்து மிரட்டல் வந்தது. ஆனால், கனிமொழி குறித்து நான் ஒருபோதும் தவறாக சொல்லமாட்டேன். காரணம், அவர் நல்ல குணம் படைத்தவர். அவர் மீது எந்த குற்றச்சாட்டும் வைப்பதற்கில்லை.
கட்சியில் எதுவும் செய்யக்கூடிய நிலையில் தற்போது கனிமொழி இல்லை என்பதுதான் உண்மை. கருணாநிதி இருக்கும்போது அவருக்கு அதிகாரம் இருந்தது. ஸ்டாலின் வந்தபிறகு அது குறைந்தது. உதயநிதியின் வருகைக்குப் பிறகு முற்றிலும் குறைக்கப்பட்டுவிட்டது. ஏற்கெனவே கட்சியில் சபரீசனா? உதயநிதியா? என்ற பிரச்சினை நிலவி வருகிறது. இதில் கனிமொழியையும் ஒதுக்கி வருகிறார்கள். ஒருவரை ஒதுக்க முதலில் அவரது ஆதரவாளர்களை ஒடுக்க வேண்டும். அந்த வகையில் தான் நானும் பாதிக்கப்பட்டேன்.”
பாஜகவில் இணையப்போவது குறித்து கனிமொழியிடம் தெரிவித்தீர்களா?
“நான் அவரிடம் பேசி வருத்தப்பட்டேன். உங்களை நம்பி தானே நாங்கள் இருக்கிறோம். இன்னும் ஏன் தயங்குகிறீர்கள். நீங்கள் தானே கட்சியில் சண்டையிட்டு எங்களுக்கான பொறுப்பை வாங்கித்தர வேண்டும் என்றேன். அதற்கு அவர், ‘நான் என்ன சொன்னாலும் அதை கேட்கும் சூழலில் கட்சி மேலிடம் இல்லை. வாரியத்திற்கு பலரின் பெயர்களை சொல்லியும் அவர்கள் எடுக்கவில்லை. நான் செய்யக்கூடிய இடத்தில் இல்லை என்றார். அதற்கு நான், ‘அப்படியென்றால், நான் கட்சியிலிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை’ என்றேன். அதற்கு கனிமொழி, ‘எல்லாருக்கும் அவர்களின் எதிர்காலம்தான் முக்கியம். மாற்றுக் கட்சியில் உங்களுக்கு அங்கீகாரம் கொடுத்து முக்கியத்துவம் கொடுத்தால் நல்லது. நீங்கள் எங்கு சென்றாலும் நான் இப்போது போலத்தான் எப்போதும் பேசுவேன்’ என்றார்.”
உதயநிதியை முன்னிலைப்படுத்த கனிமொழியை கட்சித் தலைமை ஒதுக்குகிறதா?
“ஆமாம். அது 100 சதவீதம் உண்மைதான். என்னிடமும் பலர், நீங்கள் உதயநிதியிடம் இருந்திருந்தால் உங்களுக்கு பதவிகள் கிடைத்திருக்குமே என்கின்றனர். 10 வருடமாக நான் கனிமொழிக்கு ஆதரவாளராக இருக்கிறேன். 10 வருடங்களுக்கு முன் உதயநிதியைப் போய் சந்தித்தால் அவர் எங்களை சந்திக்கமாட்டார். அப்போது அவர் சினிமாவில் இருந்ததால் படப்பிடிப்பு தளத்திற்கு கட்சிக் கொடியுடன் கூடிய காரில் வரவேண்டாம் என்பார்கள். அரசியல்வாதியை சந்திக்கவே மாட்டார். அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்று இருந்தவரை போய் நான் அப்போது எப்படி சந்தித்து பேச முடியும். அதுதான் காரணமே தவிர, மற்றபடி அவருக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.
தற்போது கட்சியில் அவர்களுக்கு வேண்டியவர்களாகப் பார்த்து பதவி, பொறுப்பு கொடுத்து ஒரு வட்டத்தை உருவாக்கி வருகிறார்கள். எம்.எம். அப்துல்லாவுக்கு எம்.பி பதவி கொடுத்தது. நாமக்கல் ராஜேஷுக்கு பதவி கொடுத்தது வரை அப்படித்தான். தற்போது டி.ஆர்.பி. ராஜாவுக்கு மாநிலப்பொறுப்பு கொடுக்கவுள்ளனர். உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கும்போது டி.ஆர்.பி. ராஜாவுக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவுள்ளனர். சென்னையில் சிற்றரசுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கின்றனர். தருமபுரி செந்தில்குமார், ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் உதயநிதியின் ஆதரவாளர்கள். அவர்களை அதிகாரத்துக்கு கொண்டுவந்து எதிர்காலத்தில் உதயநிதிக்கு தேவையான வட்டத்தை உருவாக்கி வருகிறார்கள்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கை ஓங்கியிருந்தபோது, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பொறுப்பு கொடுத்து அறிவாலயத்தில் அறை கொடுத்தனர். உதயநிதி கை ஓங்கியதும் பிடிஆரிடம் இருந்த பதவி பறிக்கப்பட்டு டிஆர்பி ராஜாவிடம் கொடுத்துவிட்டனர். அண்ணா நகர் கார்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் சபரீசன் ஆதரவாளர்கள்.”
திமுகவில் சீனியர்களின் நிலை..?
“கட்சியில் உழைப்பவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அண்ணா இருந்தபோதே, கருணாநிதிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்றால், அந்த காலத்தில் திருச்சி காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. அங்கு பொறுப்பாளராக கருணாநிதியை நிறுத்தி அங்கு அவர் திமுகவை மலர வைத்த காரணத்தால்தான் அங்கீகாரம் கொடுத்தார்கள். ஆனால், இப்போது அப்படியில்லை. எல்லாம் மாறிவிட்டது.
திமுகவில் குடும்ப பிரச்சினை தலை தூக்கியிருக்கிறது. சபரீசன் ராஜ்யசபா உறுப்பினர் பதவியைக் கேட்டு, இனி டெல்லியை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். அதற்கு மறுப்பு வரவே, ‘சரி எனக்குத்தான் தரவில்லை. உங்கள் மகளுக்காவது மேயர் பதவியைக் கொடுங்கள்’ என்றார். எங்கே சென்னை மேயர் பதவியை பெற்றுவிடுவார்களோ என பயந்துதான் பட்டியல் இனத்தவருக்கு சென்னை மேயர் பதவி கொடுத்தது. மகனுக்காக மருமகனுக்கு அங்கீகாரம் கொடுக்க மறுக்கிறார் ஸ்டாலின்.”
15 வருடங்களுக்கு மேலாக கட்சியில் இருக்கிறீர்கள்… உங்களுக்கான அங்கீகாரம் தொடர்ந்து மறுக்கப்படுவதாக சொல்கிறீர்கள். கனிமொழியின் ஆதரவாளர் என்பது மட்டும்தான் இதற்கு காரணமா?
“அதுமட்டுமில்லை. கட்சியிலிருக்கும் மற்ற வாரிசுகளுக்கு எப்படி பதவி கொடுத்தார்கள் என்றால், அவர்களது தந்தை கேட்டு சண்டை போட்டு வாங்கி கொடுத்திருக்கிறார். ஆனால், எனக்கு அப்படியில்லை. அந்த ஒரு பிரச்சினையும் இருக்கிறது. மறுபுறம் கனிமொழி ஆதரவாளர் என்ற பட்டமும் ஒரு காரணம். பல்வேறு முறை, பல்வேறு பொறுப்புகளுக்கு என் பெயரை பரிந்துரைத்தார்கள். ஆனால், கட்சித் தலைமை கண்டுகொள்ளவேயில்லை.”
பாஜகவிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்ததா? நீங்களாகச் சென்று சேர்ந்தீர்களா?
“பாஜகவில் நானாகத்தான் போய் இணைந்தேன். கட்சியின் செயல்பாடுகள் எனக்கு பிடித்திருந்தது. எனக்கு கட்சியில் நல்ல மரியாதையும் வரவேற்பும் கொடுத்தனர். கட்சியில் தொடர்ந்து உழைத்தால் உங்களுக்கான அங்கீகாரம் தேடி வரும் என்று கூறி என்னை வரவேற்றனர்.”
இவ்வளவு கட்சிகள் இருக்கும்போது ஏன் பாஜகவை தேர்ந்தெடுத்தீர்கள்? என்ன காரணம்?
“தமிழ்நாட்டின் எதிர்காலம் இனி பாஜக கையில்தான் இருக்கிறது. முதலமைச்சராக கூட எதிர்காலத்தில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் வர வாய்ப்புள்ளது.”
திமுகவின் இந்த ஒரு வருட ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
“வெளியில் ஒரு மாயையை கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் என கூறிய பல திட்டங்கள் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்சினை இருந்துகொண்டுதான் இருக்கிறது.”
கொள்கை அளவில் திமுகவுக்கு அப்படியே நேர் எதிராக பயணிக்கும் ஒரு கட்சி பாஜக. இரண்டு கட்சிகளுக்கும் கொள்கை அளவில் பெரிய அளவில் வேறுபாடுகள் உள்ளன. அப்படிப் பார்க்கும்போது பாஜகவில் இணைந்ததன் அரசியல் அடிப்படை என்ன?
“பாஜக மீதான இந்த பிம்பம் முற்றிலும் பொய்யானது. சாதிய, மத பாகுபாடுகள் இன்றும் திமுகவில்தான் நீடிக்கின்றதே தவிர, பாஜகவில் கிடையாது. திமுகவில் அப்படி இல்லை என்று வெளியில் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், உண்மை அதுவல்ல. சாதிய, மத வேறுபாடுகள் திமுகவிலும் ஆழமாக வேரூன்றி கிடக்கிறது. ஒருவர் சார்ந்த சமுதாயத்தை வைத்துதானே அவருக்கு திமுகவில் சீட் ஒதுக்கப்படுகிறது. அமைச்சரவை, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் முதற்கொண்டு அவர்கள் சமுதாயம் பார்த்துதான் பதவி வழங்கப்படுகிறது. இதனை திமுகவினரே மறுக்க முடியாது. எந்த நோக்கத்திற்காக திமுக ஆரம்பிக்கப்பட்டதோ, தற்போது அந்த நோக்கத்தில் அது செயல்படவில்லை.”