தமிழில் மீண்டும் அதிகமாகும் ரீமேக் படங்கள்
தமிழில் கடந்த இரண்டு வாரங்களாக அடுத்தடுத்து ரீமேக் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பொதுவாக ஒரு மொழியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டுவார்கள். தமிழிலும் அது போல நிறைய படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் பல வெற்றி பெற்றுள்ளன, பல தோல்வியையும் அடைந்துள்ளன.
கடந்த இரண்டு வாரங்களில் “பயணிகள் கவனிக்கவும், அக்கா குருவி, கூகுள் குட்டப்பா, விசித்திரன்” ஆகிய ரீமேக் படங்கள் வெளிவந்துள்ளன. மலையாளத்தில் வெளிவந்த 'விக்ருதி' தமிழில் 'பயணிகள் கவனிக்கவும்' படமாகவும், ஈரானிய மொழியில் வெளிவந்த 'சில்ட்ரன் ஆப் ஹெவன்' படம் தமிழில் 'அக்கா குருவி' ஆகவும், மலையாளத்தில் வெளிவந்த 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் 5.25' படம் தமிழில் 'கூகுள் குட்டப்பா' ஆகவும், மலையாளத்தில் வெளிவந்த 'ஜோசப்' படம் தமிழில் 'விசித்திரன்' ஆகவும் வெளிவந்துள்ளது.
இன்னும் கொஞ்ச காலத்தில் இப்படியான ரீமேக் படங்களுக்கு வரவேற்பு மிகவும் குறைய வாய்ப்புள்ளது. இந்த ஓடிடி காலத்தில் சப்–டைட்டில்களுடன் மற்ற மொழிப் படங்களும் ஓடிடியில் வெளிவருவதால் பலம் அவற்றைப் பார்த்துவிடுகின்றனர். மேலும், சில படங்களை ஓடிடிக்காக மட்டுமே கூட டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். அதனால், இனி ரீமேக் படங்களின் உரிமைகளை அதிக விலை கொடுத்து வாங்கி அவற்றைத் தயாரிப்பது நஷ்டத்தை மட்டுமே ஏற்படுத்தும்.