முல்லைப் பெரியாறு அணையில் மத்திய குழு ஆய்வு| Dinamalar

கூடலுார் :முல்லை பெரியாறு அணையில், மத்திய கண்காணிப்பு குழு தலைவர் குல்ஷன்ராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணை, தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளது. இங்கு நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க, உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்ஷன்ராஜ் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.

ஆலோசனை

இக்குழு ஆண்டுதோறும் அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அணையில் நடைபெற வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கும். குழுவில் உறுப்பினர்களாக தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியம், கேரள அரசு சார்பில் நீர்ப்பாசன துறை கூடுதல் தலைமை செயலர் டி.கே.ஜோஸ், நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் இடம் பெற்றுள்ளனர். இக்குழு 2021 பிப்., 19ல் அணை பகுதியில் ஆய்வு நடத்தியது. அதன் பின், நேற்று இக்குழு ஆய்வு மேற்கொண்டது.

13 ஷட்டர்கள்

அணையின் மொத்த உயரம் 152 அடியாக உள்ள நிலையில், நீர்மட்டம் 129.50 அடியாக உள்ளதால், அணைப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து இக்குழு ஆய்வு மேற்கொண்டது.மெயின் அணை, பேபி அணையை பார்வையிட்டது. நீர்க்கசிவு காலரியில் தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்திற்கேற்ப
நீர்க்கசிவு உள்ளதா என, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அது சரியான அளவிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்கள் இயக்கி பார்க்கப்பட்டன. இயக்கமும் சரியாகவே இருந்தது. ஆய்வில் பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி பொறியாளர்கள் குமார், ராஜகோபால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பெரியாறு அணையில் ஆய்வு முடிந்தவுடன், குமுளியில் உள்ள பெரியாறு அணை கட்டுப்பாடு அலுவலகத்தில் வழக்கமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். ஆனால், இக்கூட்டம்
ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.