புதுடெல்லி: ‘கட்சிக்கு விஸ்வாசத்தை காட்டும் நேரம் இது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை அமர்வு’ நிகழ்ச்சி நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், நாடு முழுவதும் இருந்து சுமார் 400 முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், கட்சியின் எதிர்கால திட்டம் மற்றும் செயல்பாடுகளை விவாதிக்கும் வகையில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, ‘‘கட்சியின் விரைவான மறுமலர்ச்சியை உறுதிப்படுத்த ஒற்றுமை, அர்ப்பணிப்பு முக்கியம். இதற்கு அனைத்து தலைவர்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மந்திர வார்த்தைகள் எதுவும் வேண்டாம். தன்னலமற்ற உழைப்பு, ஒழுக்கம் மற்றும் நிலையான கூட்டு நோக்கத்தின் உணர்வு ஆகியவற்றால் மட்டுமே நாம் நமது உறுதியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவோம். கட்சி நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் மையமாக இருந்து வருகிறது. அது நமது முழு விசுவாசத்தையும் எதிர்பார்க்கிறது. இப்போது, நாம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு தலைவர்களும் ஒரு கட்சி பதவிதான். ஒவ்வொரு கோணத்திலும் சமச்சீர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த கட்சி அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது. நாம் எதிர்கொள்ளும் சவால்களை கூட்டாகச் சமாளித்து, நம் தலைகளை ஒன்றிணைக்க வேண்டும். உதய்பூரில் ஒற்றுமை, உறுதிப்பாடு மற்றும் கட்சியின் விரைவான மறுமலர்ச்சிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த உங்கள் முழு ஒத்துழைப்பைக் கோருகிறேன்’’ என்றார்.