முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த ஓராண்டில் முதல்வர் வசம் உள்ள மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் அரசின் செயல்பாடுகள் எப்படி? நிறை, குறைகள் என்னென்ன? எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும்? – இது குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொதுச் செயலாளர் நம்புராஜன்…
நிறைகள்: “முதல்வர் வசம் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உள்ளது. இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாற்றுத் திறனாளிகள் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.130 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. உதவித் தொகை படிப்படியாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைகள்: மாற்றுத் திறனாளிகளை பற்றிய புரிதல் இல்லாமல் திமுக சார்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. பழைய சட்டத்தை குறிப்பிட்டு தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தனர். முதல்வர் வசம் துறையாக இருந்தாலும் துறையின் நடவடிக்கையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாற்றுத் திறனாளிகள் துறையில் 118 திட்டங்கள் உள்ளன. இதில் பல திட்டங்கள் நடைமுறைக்கு கூட வரவில்லை.
பெரும்பாலான திட்டங்கள் தொண்டு நிறுவனங்களை மையப்படுத்திதான் உள்ளன. மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 4 லட்சம் பேர் இருந்தால் 2,000 பேருக்கு மட்டுமே நிதி உதவி வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளி ஆணையருக்கு நீதித்துறை நடுவருக்கு இணைய அதிகாரம் உள்ளது. மாற்றுத் திறனாளிகளின் முதல் பிரதிநிதியாக அவர் இருக்க வேண்டும். ஆனால், அவர் மாற்றுத் திறனாளிகளுக்கு எதிராக செயல்படுகிறார்.
என்ன செய்ய வேண்டும்?
> புதிய சட்டம் அமலுக்கு வந்த 5 ஆண்டுகளுக்குள் அரசு கட்டிடங்களை மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்க வேண்டும். இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் இந்தச் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமைப் பணி அதிகாரிகள் முதல் அனைத்து அதிகாரிகளுக்கும் இந்தச் சட்டம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
> மாற்றுத் திறானிகளுக்கு சான்றிதழ் அளிப்பது தொடர்பாக மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
> மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை முதல்வர் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்.”