அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது இன்று அதன் ஆல் டைம் லோவினை தொட்டுள்ளது. இது சர்வதேச அளவில் பணவீக்க விகிதமானது மிக மோசமாக அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்த கவலையும் இருந்து வருகின்றது.
இதற்கிடையில் இன்று இந்திய ரூபாயின் மதிப்பானது 51 பைசா சரிவினைக் கண்டு, 77.41 ரூபாயாக வீழ்ச்சி கண்டு முடிவடைந்துள்ளது. இது கடந்த அமர்வில் 76.98 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து சரிவில் இருந்து வரும் நிலையில், இந்த சந்தையில் இதுவரையில் 17.7 பில்லியன் டாலர் முதலீடானது ஈக்விட்டி சந்தையில் இருந்து வெளியேறியுள்ளது.
சமையல் எண்ணெய் விலை உயர்வு எதிரொலி.. வரியை குறைக்கும் இந்திய அரசு? விலை குறையுமா?
இறக்குமதி
அதெல்லாம் சரி ரூபாயின் சரிவால் மக்கள் எந்த மாதிரியான தாக்கம் இருக்கலாம், வாருங்கள் பார்க்கலாம்.
நீங்கள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு டாலரில் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இதன் மூலம் கமாடிட்டிகளுக்கு அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும். இது பணவீக்கத்தினை ஊக்கப்படுத்தலாம். உதாரணத்திற்கு எண்ணெய் இறக்குமதிக்கு கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். இது எரிபொருள் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தும். இது நேரடியாக நுகர்வோரினை பாதிக்கும்.
கடன்
ரூபாயின் சரிவானது மறைமுகமாக கடனிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். தொடர்ந்து பணவீக்கமானது அதிகரித்து வரும் சூழலில் மத்திய ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இது கடனுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க வழிவக்கலாம். சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி 40 அடிப்படை புள்ளிகள் ரெப்போ விகிதத்தினை அதிகரித்த நிலையில், வட்டி விகிதம் 4.40% ஆக அதிகரித்துள்ளது. இது வங்கிகளை கடனுக்கான விகிதங்களை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. ஏற்கனவே சில வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.
கார்கள் மற்றும் மற்ற பொருட்கள்
சரிந்து வரும் ரூபாயின் மதிப்பானது, சொகுசு ரக கார்கள், வாகன உதிரி பாகங்கள் விலையினை அதிகரிக்கலாம். பெரும்பாலான இந்த வகையான பொருட்கள், கார்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. அதேபோல மொபைல் போன்கள், வீட்டுக்கு தேவையான மின்சாதன பொருட்கள் என பலவும் விலை அதிகரிக்கலாம்.
பங்குகள்
ரூபாயின் மதிப்பானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், அன்னிய முதலீடுகள் வெளியேற வழிவகுக்கலாம். இது பங்கு சந்தையில் பெரும் சரிவினை ஏற்படுத்தலாம். பங்கு சந்தைகள் சரியும் பட்சத்தில், பங்கு சந்தையுடன் தொடர்புடைய மியூச்சுவல் ஃபண்டுகளும் சரிய காரணமாக அமையலாம். இதுவும் முதலீட்டாளர்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
அண்டை நாடுகளில் கல்வி
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது, வெளி நாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் செலவினத்தினை கொடுக்கலாம், ஆக வெளி நாடுகளில் சென்று படிக்க திட்டமிடும் மாணவர்களும், ஏற்கனவே படிக்கும் மாணவர்க்ளும் இதற்கேற்ப திட்டமிட வேண்டும்.
வெளி நாடு சுற்றுலா
இந்த சம்மர் காலகட்டத்தில் வெளி நாடு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால், ஏற்கனவே திட்டமிருந்ததை விட கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும். ஆக வெளி நாடு சுற்றுலா செல்ல திட்டமிட்டுருப்போர், அதற்கு ஏற்ப தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
பரிமாற்றம்
என் ஆர் ஐ-கள் இந்தியாவுக்கு பண பரிமாற்றம் செய்யும்போது, ரூபாயின் மதிப்பில் அதிகம் அனுப்பலாம். இது அவர்களுக்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இதே போல ஏற்றுமதி செய்வோருக்கும் கட்டணமாக ரூபாயில் செலுத்தப்படுவதால் நல்ல லாபம் கிடைக்கலாம்.
ரிசர்வ் வங்கியின் தலையீடு
நிலவி வரும் நிலையற்ற தன்மையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய வங்கி டாலர்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்னிய செலவாணி விகிதம் ஒரு வருடத்தில் முதல் முறையாக 600 டாலர்களுக்கு கீழாக சரிவினைக் கண்டுள்ளது. இதனையடுத்து தான் மத்திய வங்கியானது நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது.
indian rupee hits all time low: how it impact your life?
indian rupee hits all time low: how it impact your life?/ ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. யாருக்கு என்ன பிரச்சனை.. என்னவெல்லாம் விலை அதிகரிக்கும்!