புதுடெல்லி: அசாம் மாநிலம் கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுதான்ஷூ துலியா, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜாம்ஷெட் பர்திவாலா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அந்த பரிந்துரையை ஏற்று இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இந்நிலையில், நீதிபதிகள் சுதான்ஷூ துலியா, ஜாம்ஷெட் பர்திவாலா ஆகியோர் நேற்று பதவியேற்று கொண்டனர். இருவருக்கும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் உச்சநீதிமன்றம் மீண்டும் அதன் முழு நீதிபதிகள் எண்ணிக்கையான 34 ஐ எட்டியுள்ளது.