ரஷ்யாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் முதன்முறையாக விமான சாகச நிகழ்வை ரத்து செய்துள்ளனர்.
காலநிலை விமான சாகசத்திற்கு தகுந்ததாக இல்லை என கூறியே, அந்த நிகழ்வை ரஷ்ய அதிகாரிகள் தரப்பு ரத்து செய்துள்ளது.
ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமையில் வெற்றி தின கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
இந்த விழாவில் 11 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றியுள்ள விளாடிமிர் புடின், நேட்டோ நாடுகள் ரஷ்யாவை குறிவைப்பதாக குறிப்பிட்டுள்ளதுடன், அதன் காரணமாகவே உக்ரைன் மீது சிறப்பு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைன் மீது முழுமையான போர் அறிவிப்பை புடின் வெளியிடுவார் என எதிர்பார்த்த நிலையில், அது தொடர்பில் அவர் எந்த கருத்தும் குறிப்பிடாமல் உரையை முடித்துக் கொண்டுள்ளார்.
மட்டுமின்றி, பொதுவாக வெற்றி தின கொண்டாட்டமானது ரஷ்யாவின் இராணுவ பலத்தை உலக நாடுகளுக்கு பறைசாற்றும் நிகழ்வாக அமையும்.
ஆனால் இந்த முறை, 35% அளவுக்கு பேரணி குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி80 ரக டாங்கிகள் எண்ணிக்கையும் இந்த முறை குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உக்ரைனில் சுமார் 120 எண்ணிக்கையிலான டி80 டாங்கிகள் சேதமடைந்துள்ளதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
12,000 வீரர்கள் பொதுவாக வெற்றி தின கொண்டாட்டத்தில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால் இந்த முறை 10,000 வீரர்கள் மட்டுமே பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.
மட்டுமின்றி, விமான சாகசங்கள் அனைத்தும் இந்தமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் ஏவுகணைக்கு பயந்தே, விமான சாகசங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒரு கருத்தும் வெளியாகியுள்ளது.