புதுச்சேரி : ஜிப்மர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் சிவா உள்பட 4 தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கைது செய்யப்பட்டனர்.ஜிப்மரில் இந்தி மொழி திணிக்கப்படுவதாகக் கூறி, புதுச்சேரி தி.மு.க., சார்பில் நேற்று ஜிப்மர் மருத்துவமனை எதிரே முற்றுகை போராட்டம் நடந்தது. தி.மு.க., மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா தலைமை தாங்கினார்.
அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.சீனியர் எஸ்.பி., தீபிகா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் உட்பட 500 பேரை கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியதாவது:புதுச்சேரியில் பா.ஜ., கூட்டணி ஆட்சி என்பதால், இந்தி திணிப்பு விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி வாய் திறக்காமல் உள்ளார். இதன் மூலம் அவர் மக்களை சங்கடப்படுத்துகிறார். முதல்வர் ரங்கசாமி வாய் திறந்து தன கருத்தை சொல்ல வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழ் மொழிக்கு ஒரு இழுக்கென்றால் நாங்கள் சிறை செல்லவும் கவலைப்பட மாட்டோம். எவ்வளவு பெரிய போராட்டத்தையும் நடத்த தயாராக உள்ளோம்.
ஜிப்மர் இயக்குநர் தனது அறிவிப்பை திரும்ப பெறவில்லை என்றால், கட்சி தலைமையிடம் அனுமதி பெற்று, ஜிப்மர் இயக்குனர் வீட்டின் முன்பும் போராட்டம் நடத்துவோம். புதுச்சேரி ஒரு அமைதியான மாநிலம். அதனை சீர்குலைக்க வேண்டாம் என்று எச்சரிக்கையாக கேட்டுக் கொள்கிறோம்.ஜிப்மர் இயக்குநராக ராகேஷ் அகர்வால் வந்தபிறகு 83 வகையான மருந்துகள் வாங்காமல் விட்டுள்ளனர். பிரசவத்திற்கு வரும் பெண்களிடம் கூட கையுறையை அவர்களே வாங்கி வருமாறு கூறுகின்றனர். நேரடி நியமனங்கள் மூலம் 44 பணியிடங்கள் நிரப்பி உள்ளனர். அதில் புதுச்சேரி, தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட இல்லை. இவ்வளவு அராஜகமாக செயல்படும் துணிச்சலை இயக்குநருக்கு பா.ஜ., கொடுத்துள்ளது. அதை நாங்கள் முறியடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement