புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 34 ஆகும். இதில் 2 இடங்கள் காலியாக இருந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 5-ம் தேதி தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் கூடியது. அந்த கூட்டத்தில் குவாஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதன்ஷு துலியா, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜம்ஷெட் பர்ஜோர் பர்திவாலாவை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக கொலிஜியம் சார்பில் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. கடந்த 7-ம் தேதி கொலிஜியத்தின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் ராம்நாத் ஏற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்பின், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக சுதன்ஷு துலியா, ஜம்ஷெட் பர்ஜோர் பர்தி வாலா ஆகியோர் நேற்று பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண் ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
எனினும் உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து நீதிபதிகள் ஓய்வுபெற உள்ளதால் புதிய காலியிடங்கள் உருவாக உள்ளன. நீதிபதி வினித் சரண் இன்று ஓய்வு பெறுகிறார். அவரை தொடர்ந்து ஜூன் 7-ம் தேதி நீதிபதி நாகேஸ்வர ராவும் ஜூலை 29-ம் தேதி நீதிபதி கான்வில்கரும் பதவியை நிறைவு செய்கின்றனர். தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, யு.யு.லலித் ஆகியோர் ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் அடுத்தடுத்து ஓய்வு பெறுகின்றனர்.