பெங்களூரு: மசூதி , சர்ச் மற்றும் இந்து கோயில்களில் ஒலி பெருக்கி பயன்படுத்தும் போது விதிகளை கடைபிடிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எந்தெந்த நேரங்களில் எவ்வளவு டெசிபில் ஒலி எழுப்பப்பட வேண்டும் என்பதற்கான விதிகளையும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் வரையறுத்துள்ளது. இதைத்தொடர்ந்து ராம சேனை அமைப்பினர் மசூதி மற்றும் சர்ச் ஆகியவற்றில் அனுமதி இன்றி பயன்படுத்தப்படும் ஒலி பெருக்கிகளை பறிமுதல் செய்யவேண்டும் என்றும் இதற்கு மே 9 வரை கால அவகாசம் வழங்கினர். இந்நிலையில் நேற்று மாநிலம் முழுவதும் இந்து கோயில்களில் ராம சேனை அமைப்பினர் பஜனை நடத்தினர். அத்துடன் சில இடங்களில் இரு தரப்பு இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. இது குறித்து முதல்வர் பசவராஜ்பொம்மை கூறியதாவது: ‘கோவில்கள், சர்ச் மற்றும் மசூதி உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு இடங்களில் விதிகளின்படி ஒலி பெருக்கிகள் அமைக்கப்படவேண்டும். விதிகளை யார் மீறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு கண்டிப்பாக அமல்படுத்தப்படவேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். ஒலி பெருக்கி விவகாரத்தில் காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரையும் மாலை 6 மணி முதல் காலை 10 மணி வரை வெவ்வேறு ஒலி அளவுகளில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும். இதற்கான அனுமதி பெறுவதற்கு 15 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஒலி பெருக்கி பயன்பாட்டில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர் என்ற பாகுபாடு கிடையாது. விதிகள் மீறினால் அனைவரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’. இவ்வாறு அவர் கூறினார்.