மறைந்த பிலிப்பைன்ஸ் சர்வாதிகாரி ஃபெர்டினாண்ட் மார்கோஸின் மகன் ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட தேர்தலில், 64 வயதான மார்கோஸ் ஜூனியர் சுமார் 30 மில்லியன் வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.
பிலிப்பைன்ஸில் கொடுங்கோல் ஆட்சியை முன்னெடுத்த ஃபெர்டினாண்ட் மார்கோஸ் மற்றும் அவரது மனைவி இமெல்டா மார்கோஸ் ஆகியோர் 1986ல் ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாக நாட்டைவிட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது.
ஆனால், தமது குடும்பம் முன்னெடுத்த கொடுங்கோல் ஆட்சியை மறைத்து, மக்களை ஏமாற்றி மார்கோஸ் ஜூனியர் தேர்தல் பரப்புரைகளை முன்னெடுத்தார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
மார்கோஸ் ஜூனியர் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானால் இரக்கமற்ற ஆட்சியை முன்னெடுப்பார் என மனித உரிமை ஆர்வலர்கள், கத்தோலிக்க தலைவர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் அனைவரும் எச்சரித்திருந்தனர்.
இதனிடையே, பரப்புரைகளில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த மார்கோஸ் ஜூனியர், உழைப்பும் ஆதரவும் வீண் போகாது என்றார்.
மேலும், வாக்கு எண்ணிக்கை முடிவடையாத நிலையில், கொண்டாட்டங்கள் வேண்டாம் என குறிப்பிட்ட அவர், பொறுமை காக்கவும் ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.