புதுடெல்லி: தேசத் துரோக சட்ட விதிகளை மறு ஆய்வு செய்வோம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்திய தண்டனை சட்டத்தில் 124ஏ பிரிவு தேசத் துரோகத்தை வரையறுக்கிறது. நாட்டில் நடைமுறையில் உள்ள இந்திய குற்றவியல் சட்டம் 124ஏ-வானது நாட்டுக்கு தேசத் துரோகம் இழைத்தவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்ய வகை செய்கிறது. தேசத்துரோக சட்டப் பிரிவு 124ஏ-ன் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் நபருக்கு ஜாமீன் கிடைக்காது. இப்பிரிவின் கீழ் கைது செய்யப்படும் நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்க பிரிட்டிஷ் அரசால் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, எடிட்டர்ஸ் கில்டு எனப்படும் பத்திரிகை ஆசிரியர் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.
விசாரணையின்போது, நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் கூட இந்த சட்டப் பிரிவு அவசியம்தானா? மத்திய அரசு இந்த பிரிவை இன்னமும் ரத்து செய்யாமல் இருப்பது ஏன்? என வழக்கு தொடுத்தவர்கள் சார்பில் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்திருந்தனர். ஆனால், மத்திய அரசு தரப்போ தேசத் துரோக சட்டப் பிரிவு தொடர்ந்து நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டது.
இதைத் தொடர்ந்து இது தொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய கடந்த ஏப்ரல் 27-ம்தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தேசத் துரோக சட்டத்தை நீக்குவதை வலியுறுத்தி நேற்றைய (09-05-2022 இதழ்) இந்து தமிழ் திசை நாளிதழில் கட்டுரை வெளியாகியிருந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக மத்திய அரசு பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதில், “இந்தச் சட்டப் பிரிவை மறுஆய்வு செய்யவும், மறுபரிசீலனை செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கொண்டாடி வரும் வேளையில் (அம்ருத் மகோத்சவ்) பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில், தேசத்துரோகச் சட்டத்தின் பிரிவு 124-ஏ விதிகளை மறுஆய்வு செய்யவும், மறுபரிசீலனை செய்யவும் மத்திய அரசு விரும்புகிறது.
எனவே, இதுதொடர்பான வழக்குகளில் முடிவெடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் காத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொள்கிறது. சட்ட விதிகளில் மறுஆய்வு, மறுபரிசீலனை செய்வதற்கு கால அவகாசத்தையும் வழங்குமாறு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுக் கொள்கிறது” என்று கூறியுள்ளது.