கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள், “ஷவர்மாவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதற்கு குடியாத்தம் நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், இதுபோன்ற கடைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நகரமன்ற தலைவர் சௌந்தரராஜன் கூறுகையில், “பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட இளைஞர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஷவர்மாவால் உடல் உபாதைகள் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, சிக்கன் வகைகளில் ஒன்றான ஷவர்மா மட்டும் குடியாத்தம் நகராட்சியில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார். மேலும் சுகாதாரமற்ற முறையில் அசைவ உணவுகளை விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்தார்.