கொரோனாவுக்காக தொழில் நகரங்கள் முடக்கம் எதிரொலி: சீனாவின் வர்த்தகம் வீழ்ச்சி

பீஜிங் :

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பொருளாதார வல்லரசாக சீனா திகழ்ந்து வருகிறது.

ஆனால், கொரோனா மீண்டும் தலைதூக்கி இருப்பதால், சீனாவின் வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி 27 ஆயிரத்து 360 டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.7 சதவீதம் அதிகம்.

ஆனால், கடந்த மார்ச் மாதம் ஏற்றுமதி 15.7 சதவீத வளர்ச்சி கண்டிருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு ஆகும். அதே சமயத்தில், பிற நாடுகளில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படுவது சற்று அதிகரித்துள்ளது.

சீனாவின் முக்கிய தொழில் நகரான ஷாங்காயிலும், இதர தொழில் நகரங்களிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக, ஷாங்காயில் நோய் பாதித்தவர்களை முழுமையாக ஒதுக்கி வைக்க வேண்டும், ‘கொரோனா பூஜ்யம்’ என்ற நிலை உருவாக வேண்டும் என்பதில் சீன அதிபர் ஜின்பிங் உறுதியாக உள்ளார். இதனால், நகரில் பாதிக்கு மேற்பட்டோர் வீடுகளுக்குள் முடங்கினர்.

தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால், கார்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் இதர தொழில்துறைகளில் உலகளாவிய வர்த்தகம் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

உலக அளவில் பரபரப்பாக இயங்கி வந்த ஷாங்காய் துறைமுகம், தற்போது வழக்கம்போல் இயங்கி வருகிறது. இருந்தாலும், சரக்குகளை கையாள்வதில் வழக்கத்தை விட 30 சதவீதம் குறைவாக செயல்படுகிறது.

சரக்குகளை கொண்டு செல்ல லாரி டிரைவர்கள் கிடைக்க மாட்டார்கள் என்று அஞ்சி, ஷாங்காய் துறைமுகத்தை கப்பல் நிறுவனங்கள் தவிர்க்கின்றன.

அமெரிக்காவில் பணவீக்கமும், வட்டி விகிதமும் அதிகமாக உள்ளது. இதனால், சீன பொருட்களின் தேவை சரிந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், சீனாவின் வர்த்தகம் வீழ்ச்சி அடைந்துள்ளது. நடப்பு காலாண்டிலும் இந்த சரிவு தொடரும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.