சென்னை: முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் லண்டன் செல்ல உள்ளதாகவும், ஜூலையில் அமெரிக்கா செல்லப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மு.க.ஸ்டாலின், கடந்த மார்ச் மாதம் துபாய் மற்றும் அபுதாபி சென்று பல ஆயிரம் கோடி மதிப்பில் முதலீடுகளை ஈர்த்தார். அந்த முதலீடுகளின் படி பல்வேறு நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டு, தொழில் தொடங்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன.
இதுதவிர, தூத்துக்குடியில் அறைகலன் பூங்கா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளையும் முதல்வர் தொடங்கி வைத்துவருகிறார். சட்டப்பேரவையில் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அடுத்த கட்டமாக பல்வேறு நாடுகளுக்கு முதல்வர் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான சூழல் வரும்போது செல்வார் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதம், முதல்வர் ஸ்டாலின் லண்டன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், இதைத்தொடர்ந்து ஜூலை மாதத்தில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.