இன்றைய கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

இந்திய நிகழ்வுகள்

பயங்கரவாதத்திற்கு ஆட்சேர்த்த வழக்கு; 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி

கொச்சி : பயங்கரவாத அமைப்புகளுக்கு கேரள இளைஞர்களை ஆட்சேர்த்த வழக்கில், 10 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது .ஜம்மு – காஷ்மீரில், 2013ல், பயங்கரவாத முகாம்களை நடத்தி, அதில் கேரள இளைஞர்களை சேர்த்த லஷ்கர் – இ – தொய்பா அமைப்பை சேர்ந்த ததியந்தவிடே நசீர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருடன், மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை, கேரளாவின் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வுப் பிரிவின் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிவில், அவர்கள், 13 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம், அவர்களுக்கு ஆயுள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, 13 பேரும், கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் வினோத் சந்திரன் மற்றும் ஜெயச்சந்திரன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, 13 பேரில், பைசல், உமர் பரூக் மற்றும் முகமது நவாஸ் ஆகிய மூவரை, வழக்கில் இருந்து விடுவித்த உயர் நீதிமன்றம் மீதமுள்ள, 10 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதிபடுத்தி உத்தரவிட்டது. தாதா கூட்டாளி கைதுநிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமுக்கு எதிரான வழக்குகளில், என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று, மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள, 20க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, மற்றொரு தாதாவான சோட்டா ஷகீலின் நெருங்கிய கூட்டாளி சலீம் குரேஷியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். அவருடன், ஹாஜி அலி தர்காவின் அறங்காவலரும் கைது செய்யப்பட்டார்.

போதை கடத்தல் 19 வக்கீல்களுக்கு தடை விதிப்பு

சென்னை: கொலை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் தொடர்புடைய, 19 வழக்கறிஞர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் ராஜாகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கொலை, போதைப் பொருள் விற்பனை, கடத்தல், போலி மருத்துவ ரசீதுகள் வாயிலாக விபத்து இழப்பீடு கோருதல் போன்ற குற்ற வழக்குகளில் ஈடுபட்ட, 19 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதிக்கப்படுகிறது.

இசை கருவியில் போதை பொருள் கடத்தல்

சென்னை : சென்னை மண்ணடியில் பதுங்கியுள்ள மர்ம கும்பல், சில்வர் பாத்திரங்கள், நுால் கண்டு, இசைக்கருவி என, விதவிதமான பொருட்களில், ஆஸ்திரேலியாவுக்கு போதை பொருள் கடத்துவது அம்பலமாகி உள்ளது.சமீபத்தில், பெங்களூரு விமான நிலையத்தில், வெளிநாடுகளுக்கு அனுப்ப இருந்த ‘பார்சல்’களை, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.அதில் சில்வர் பாத்திரங்கள், நுால் கண்டு, திருமண விழாவிற்கு அச்சிடப்பட்ட அழைப்பிதழ்கள் என, விதவிதமான பொருட்கள் இருந்தன.அவற்றை சோதனை செய்த போது,’எபிட்ரின்’ என்ற போதை பொருள் இருந்தது. தொடர் விசாரணையில், இந்த ‘பார்சல்’கள், சென்னை மண்ணடியைச் சேர்ந்த மர்ம கும்பல், ஆஸ்திரேலியாவுக்கு கடத்த இருந்தது தெரிந்தது.

இந்த கும்பல், சென்னையிலேயே எபிட்ரின் போதை பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்த கும்பலை பிடிக்க, கர்நாடக மாநில போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சென்னை வந்துள்ளனர். மர்ம கும்பல், மார்ச் மாதத்தில், 52 சில்வர் பாத்திரங்களில், எபிட்ரின் போதை பொருள் கடத்தி உள்ளது.அதேபோல, சென்னை சாந்தோம் பகுதியில் திருமணம் நடக்க இருப்பது போல, அதற்காக, 100 அழைப்பிதழ்களை அச்சிட்டு, அதில்போதை பொருள் கடத்தி உள்ளது. அத்துடன், நுால் கண்டு, கிடார் இசை கருவி போன்ற பொருட்களிலும் எபிட்ரின் கடத்திஉள்ளது.இவற்றை, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதன் பின்னணி குறித்தும் விசாரணை நடக்கிறது.

ரூ.32 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை : ஆசனவாயில் மறைத்து கடத்தி வரப்பட்ட, 31.99 லட்சம் ரூபாய் மதிப்பிலான 686 கிராம் தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஐக்கிய அமீரக அரபு நாடுகளில் ஒன்றான துபாயிலிருந்து, ‘பிளை துபாய்’ விமானம் நேற்று முன்தினம் சென்னை வந்தது. அதில் வரும் பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக, சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகத்திற்கிடமாக விமான முனையத்தை விட்டு வெளியேற முயன்ற பயணி ஒருவரை சோதனை செய்தனர்.அவரது ஆசனவாயில், தங்க பசை அடங்கிய பொட்டலம் இருந்தது. அதை வெளியே எடுத்து மதிப்பிட்டதில், 31.99 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 686 கிராம் தங்கம் இருந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட பயணியை கைது செய்து, மேலும் விசாரிக்கின்றனர்.

பிரபல எழுத்தாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு

புதுடில்லி : கடந்த 10 ஆண்டுகளாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளர் நிலோத்பல் மிருணாள் மீது, 32 வயது பெண் புகார் கொடுத்துள்ளார்.டில்லி திமார்பூர் போலீஸ் ஸ்டேஷனில் அவர் கொடுத்துள்ள புகாரின் விபரம்:கடந்த 10 ஆண்டுகளாக டில்லி முகர்ஜி நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து, மத்திய அரசு பணியாளர் தேர்வுக்கு படித்து வருகிறேன். கடந்த 2011ல் சமூக வலைதளம் வாயிலாக பிரபல எழுத்தாளர் நிலோத்பல் மிருணாள், 37, எனக்கு அறிமுகம் ஆனார். இருவரும் நெருங்கிப் பழகினோம்.

latest tamil news

கடந்த 2013ல் கண் பரிசோதனைக்காக, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு சென்று விட்டு தாமதமாக வீட்டுக்கு வந்தேன். அதற்காக என்னை அடித்து துன்புறுத்தினார். பின், வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். மறுநாள் என்னை திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்தார். இப்படி, கடந்த 10 ஆண்டுகளில் பல முறை என்னை பலாத்காரம் செய்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடு புகுந்து கத்தியால் வெட்டிய கும்பலுக்கு வலை

அரியாங்குப்பம் : முதலியார்பேட்டையில் முன் விரோத தகராறில் வீட்டில் புகுந்து ஒருவரை கத்தியால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.வாணரப்பேட்டையை சேர்ந்தவர் கமலஹாசன்,36. முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ். உறவினரா இவர்களுக்கிடையே முன் விரோதம் இருந்து வருகிறது.கடந்த ஒரு வாரமாக இவர்களின் குடும்பத் தகராறு குறித்து முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.

latest tamil news

இந்நிலையில், நேற்று இரவு 8:30 மணியளவில் கமலஹாசன் வீட்டில் இருந்தார்.மோட்டார் பைக்கில் வந்த நாகராஜ் உள்ளிட்டோர் வீட்டில் புகுந்து கமலஹாசனை கத்தியால் வெட்டினர். குடும்பத்தினர் சத்தம் போட்டதால் தப்பிச் சென்றனர்.இதில் பலத்த காமயமடைந்த கமலஹாசன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, நாகராஜ் உள்ளிடடோரை தேடி வருகின்றனர்.

மரத்தில் லாரி மோதி விபத்து

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே லாரி மோதியதில் மரம் அடியோடு உடைந்து சாலையில் விழுந்ததில் போக்குவரத்து பாதித்தது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு சரக்கு ஏற்றிக்கொண்டு கேன்டர் லாரி சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை கண்டமங்கலம் அடுத்த பள்ளித் தென்னல் பஸ் நிறுத்தம் அருகே, சாலையோர மரத்தில் மோதியது. இதில் மரம் அடியோடு உடைந்து சாலையில் விழுந்தது. லாரியின் முன்பக்கம் சேதம் அடைந்தது. டிரைவர், கிளீனர் லேசான காயத்துடன் தப்பினர். கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி தலைமையிலான போலீசார், மரத்தை வெட்டி அகற்றி போக்கு வரத்தை சரி செய்தனர். இச்சம்பவத்தால் 30 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது.

தீக்குளித்த தாயை காப்பாற்ற முயற்சித்த மகனும் பலி

புழல் : குடும்ப பிரச்னையால் தீக்குளித்த தாயை காப்பாற்ற முயன்ற மகனும், தீயில் சிக்கி பலியானார்.சென்னை புழல் அடுத்த காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், நான்காவது தெருவைச் சேர்ந்தவர் சேவியர், 64; இவரது மனைவி தேவகி, 58; இவர்களது மகன் மாரி, 35; மகள் ராணி, 32. கடந்த 5ம் தேதி இரவு இவர்களுக்குள் குடும்ப பிரச்னை ஏற்பட்டது.அதனால் மகள் ராணி, ‘நாம் யாரும் உயிருடன் இருக்க வேண்டாம்’ என கூறி, தன் அம்மா, அண்ணன், அப்பா மற்றும் தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.பின், குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தினர்.

குடும்ப நிலையை எண்ணி மனமுடைந்த தாய் தேவகி, தன் மீது தீ வைத்துக் கொண்டார்.அவரை காப்பாற்ற முயன்ற மகன் மாரி, மகள் ராணி ஆகியோர் தீக்காயம் அடைந்தனர்.மூவரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், குடும்பத்தினரை தற்கொலைக்கு துாண்டியதாக, புழல் போலீசார், 6ம் தேதி ராணியை கைது செய்தனர்.இந்நிலையில், 7ம் தேதி இரவு தேவகி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, 8ம் தேதி நள்ளிரவு, மகன் மாரியும் உயிரிழந்தார். இது குறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

பொன்னேரியில் ரவுடி படுகொலை; கவுன்சிலர் கணவர் உட்பட 6 பேர் சரண்

பொன்னேரி : முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நகராட்சி கவுன்சிலர் கணவர் உட்பட ஆறு பேர் போலீசில் சரண் அடைந்தனர்.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா அலுவலக சாலையைச் சேர்ந்தவர் ஜவகர், 32. இவர், கொலை, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். ரவுடியாக வலம் வந்த இவர், சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமினில் வந்தார்.இதையடுத்து, கடந்த மாதம் 26ம் தேதி, கஞ்சா பொட்டலங்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கி ஒன்று வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக, போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.

இவருக்கு, வேண்பாக்கம் பள்ளம் பகுதியைச் சேர்ந்த உறவினர் விஜி, 35, என்பவருடன் முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, ஜவகர், மைத்துனர் சிகன், 26, என்பவருடன், வேண்பாக்கம் பள்ளத்தில் உள்ள தாயை பார்க்க சென்றார்.அப்போது அவர்களை வழிமறித்த கும்பல், இருவரையும் சரமாரியாக வெட்டியது. இதில், ஜவகர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.சிகன் ஆபத்தான நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த கொலை சம்பவம் தொடர்பாக, வேண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்த விஜி மற்றும் அவரது கூட்டாளிகள் ஐந்து பேர் என, ஆறு பேர் பொன்னேரி போலீசில் சரண் அடைந்தனர்.

இதில், விஜி, பொன்னேரி நகராட்சி கவுன்சிலர் ஒருவரின் கணவராவார்.கொலையுண்ட ஜவகரின் வீட்டை, ஓராண்டிற்கு முன் விஜி தரப்பினர் எரித்து உள்ளனர். இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து உள்ளது. இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.மேலும், கஞ்சா விற்பனை, ரவுடிசம் செய்வதில் யார் பெரியவர் என்பதில் ஏற்பட்ட போட்டி தான் முன்விரோதத்திற்கு காரணமாக இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். சரண் அடைந்தவர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.