பிரதமரின் அதிவிரைவு சக்தி திட்டத்தில் இணைந்தது புதுச்சேரி!| Dinamalar

புதுச்சேரி: பிரதமரின் ‘அதிவிரைவு சக்தி’ திட்டத்தில் புதுச்சேரி இணைந்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் உள்கட்டமைப்பினை மேம்படுத்த அதிகாரமிக்க இரண்டு குழுக்கள் ஏற்படுத்த கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், கதி சக்தி (அதிவிரைவு) திட்டம் என்ற தேசிய மாஸ்டர் பிளான் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இத்திட்டம் ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் அமல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின்படி, நாட்டின் உள்கட்டமைப்பினை மேம்படுத்த ரயில்வே, சாலைகள், பெட்ரோலியம் மற்றும் எரிவாயு, மின்சாரம், தொலைத்தொடர்பு, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட 16 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஒன்றிணைக்கப்பட உள்ளது. இதற்காக ‘டிஜிட்டல் பிளார்ட்பார்ம்’ துவக்கப்படுகிறது.

இந்த பிளாட்பாரத்தில் இணைய, மாநில அரசு களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுவித்து இருந்தது.இத்திட்டத்தில் புதுச்சேரி மாநிலமும் தற்போது இணைகிறது. இதற்காக புதுச்சேரி உள்கட்டமைப்பு மாஸ்டர் பிளானில் ஏதேனும் மாற்றங்களை அங்கீகரிப்பதற்காக, தலைமைச் செயலர் தலைமையில் அதிகாரமளிக்கப்பட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் எட்டு துறைகளின் செயலர்கள் இடம் பெற்றுள்ளனர்.இதேபோல், தொழில் வணிகத் துறை செயலர் தலைமையில் ஒருங்கிணைந்த மல்டிமோடல் நெட்வொர்க் திட்டமிடல் குழு, தொழில் மற்றும் வணிகத் துறை செயலர் தலைமையில் அமைக்கப் பட்டுள்ளது.
இக்குழுவில் 12 துறைகளின் இயக்குனர்கள் இடம் பெற்றுள்ளனர். இக்குழு ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புக்கு பொறுப்பேற்று செயல்படும்.மேலும், மாஸ்டர் பிளானுக்கு வெளியே உள்ள 500 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு இணைப்பு திட்டங்களை இந்த குழு கண்காணிக்கும்.
பிரதமரின் அதிவிரைவு சக்தி திட்டத்தினை வேகப்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த இரண்டு குழுக்களுக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் தந்துள்ளார்.2 லட்சம் கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள், 1,600 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் ரயில்கள், எரிவாயு குழாய் நெட்வொர்க்கை 35,000 கி.மீ., வரை இரட்டிப்பாக்குதல், நாட்டில் உள்ள பொருளாதார மண்டலங்களை இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு இலக்குகள் கதி சக்தி திட்டத்தில் உள்ளடங்கி உள்ளது.

latest tamil news

எனவே, புதுச்சேரி மாநிலத்தில் எத்தகைய உட்கட்டமைப்பினை உருவாக்கி, தேசிய கதி சக்தி திட்டத்துடன் இணைக்கலாம் என்பதை, ஒருங்கிணைந்த மல்டிமோடல் நெட்வொர்க் திட்டமிடல் குழு விரைவில் முடிவு செய்ய உள்ளது.அத்துடன், மாநிலத்திற்கு தனியாக உட்கட்டமைப்பிற்கான மாஸ்டர் பிளானை உருவாக்கி, உயர் மட்ட குழுவான அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடம் ஒப்புதல் பெற உள்ளது.உட்கட்டமைப்பு திட்டங்களில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதிகாரமளிக்கப்பட்ட குழு முன்னின்று சமாளிக்கும். விரைவான முடிவெடுத்து பிரச்னைகளை தீர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.