“அதிமேதாவிகள் போல நடந்துகொள்ளாதீர்கள்..!” – அதிகாரிகளை விளாசிய அரியலூர் ஆட்சியர்

“மனுக்களை எதற்காக மக்கள் நம்மிடம் கொடுக்க வருகிறார்கள். எப்படியாவது பிரச்னை தீர்ந்துவிடும் என்கிற நம்பிக்கையில் நம்மை நாடுகிறார்கள். ஆனால் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எப்படி நம் மீது நம்பிக்கை வரும். அதிகாரிகள் என்றால் மேதாவிகளா. மக்களுக்காகச் சேவை செய்யுங்கள். அதிமேதாவிகள் போல நடந்துகொள்ளாதீர்கள்” என அதிகாரிகளை லெப்ட் ரைட் வாங்கினார் அரியலூர் கலெக்டர்.

அரியலூர் கலெக்டர் ஆபிஸ்.

அரியலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதியால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

அரியலூர்

இந்நிலையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆட்சியரால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார். ஆய்வின்போது பல மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் கடுமையாக எச்சரித்தார்.

அரசு அதிகாரிகள்

”நான் நடவடிக்கை எடுக்கச் சொல்லிக் கடந்த வாரமே மனுக்களை அனுப்பினேனே. ஏன் ஒருவாரம் ஆகியும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பினர். “மயிலே மயிலே என்றால் இறகு போட மாட்டீர்கள். அதிகாரிகள் என்றால் மேதாவிகளா. நீங்கள் அதிமேதாவிகள் போல் எல்லோரும் நடந்து கொள்கிறீர்கள். உங்களைப் பாராட்டிச் சீராட்டித் தெரியாததைச் சொல்லிக் கொடுத்து வேலை செய்யச் சொன்னாலும் நீங்கள் செய்ய மாட்டீர்களா.

யார் சொன்னால் நடவடிக்கை எடுப்பீர்கள். மக்கள் கொடுக்கும் மனுக்களின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டால் ஏதாவது ஒரு கதையைச் சொல்லிருக்கலாம் என்ற எண்ணத்தில் இங்கு வருகிறீர்களா?. மனுக்களை மக்கள் எதற்காக நம்மிடம் கொடுக்கவருகிறார்கள்.

அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி

எப்படியாவது பிரச்னை தீர்ந்துவிடும் என்கிற நம்பிக்கையில் நம்மை நாடுகிறார்கள். ஆனால் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எப்படி நம் மீது நம்பிக்கை வரும். மக்களுக்காகச் சேவை செய்யுங்கள். அதிமேதாவிகள் போல நடந்துகொள்ளாதீர்கள்” என அதிகாரிகளுக்கு டோஸ் விட்டதோடு அதிகாரிகளைப் பார்த்து ஆவேசமாகக் கேள்விகளை எழுப்பினார். இனிமேல் இதுபோன்ற தவறுகள் ஏற்படாத வகையில் பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் கண்டிப்பாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார் ஆட்சியர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.