மொஹாலி குண்டு வெடிப்பு: உயர்மட்ட விசாரணைக்கு முதல்வர் உத்தரவு!

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள காவல் துறை உளவுப் பிரிவு தலைமை அலுவலகத்தில் நிகழ்ந்த வெடி குண்டு தாக்குதல் குறித்து, உயர் மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தெரிவித்து உள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலியில் அம்மாநில காவல் துறையின் உளவுப் பிரிவு தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகம் என்பதால் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் காணப்படும். இந்நிலையில், நேற்று இரவு 7.45 மணியளவில் இந்த அலுவலகத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

அலுவலகம் அமைந்துள்ள தெருவில் இருந்து ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டு வீசப்பட்டுள்ளது. அலுவலகத்தின் ஜன்னல் மீது விழுந்த வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஜன்னல் கண்ணாடிகள் சுக்குநூறாக நொறுங்கின. அப்பகுதியை அதிர வைத்த இந்த சம்பவத்தையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தடயவியல் குழுவினர் நேரில் வந்து ஆய்வு விசரணை நடத்தி வருகின்றனர்.

உளவுப் பிரிவு தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, “ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டு உள்ளது. சிறிய ரக வெடித் தாக்குதல் இது. இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர். தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் சிங் மான், சமூக வலைதளமான ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது:

மொஹாலியில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மாநிலத்தின் அமைதியான சூழலை கெடுக்க முயன்ற குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.