திருமணத்தில் திடீர் மின் தடை – எக்ஸ்சேஞ்சான மணப்பெண்கள்!

மத்திய பிரதேச மாநிலத்தில், மின் தடை காரணமாக, மணமகன்கள் மணப்பெண்களை மாற்றி திருமணம் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயின் நகரை சேர்ந்த ரமேஷ் லால் என்பவருக்கு நிகிதா, கரிஷ்மா ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க, ரமேஷ் முடிவு செய்தார். அதன்படி, இரு வேறு குடும்பங்களை சேர்ந்த கணேஷ், போலா ஆகியவருக்கும் தனது இரண்டு மகள்களை திருமணம் செய்து வைக்க அவர் சம்மதம் தெரிவித்தார்.

இந்நிலையில், சகோதரிகள் நிகிதா, கரிஷ்மா ஆகிய இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமணத்தின் போது மணப்பெண்கள் இருவரும் தலையில் முக்காடு போட்டு மூடி இருந்தனர். மேலும், இரண்டு பெண்களும் ஒரே மாதிரியான ஆடைகள் அணிந்திருந்தனர்.

இதற்கிடையே, திருமணச் சடங்கு முழு வேகத்தில் நடந்து கொண்டிருந்த போது, திடீரென மின் தடை ஏற்பட்டது. அப்போது, திருமண சடங்குகள் நடைபெறும் போது இருட்டில் மணப்பெண்கள் மாறி விட்டனர். நிகிதா, கரிஷ்மாவின் மாப்பிள்ளை கணேஷுடன் அமர்ந்தும், கரிஷ்மா, நிகிதாவின் மாப்பிள்ளை போலாவுடன் அமர்ந்து சடங்குகளைச் செய்தனர். மின்தடையால், புரோகிதரும் இதனை கவனிக்கவில்லை.

திருமணம் முடிந்து இரு பெண்களும் தங்களது கணவன் வீட்டிற்கு சென்ற பிறகு தான் தாங்கள் போட்டு இருந்த முக்காடை அகற்றினர். முக்காடை அகற்றியதும் மணமகனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. நான் இந்த பெண்ணை பார்க்கவில்லையே… எப்படி மணப்பெண் மாறியது என்று கேட்டு, பெண் வீட்டாருடன் சண்டை போட்டார். இறுதியில் மின் தடையால் மணப்பெண் மாறி விட்டதை இரு மருமகன்களிடம் சொல்லி பெண் வீட்டார் சமாதானப்படுத்தப்படுத்தினர். மின் தடை காரணமாக திருமணத்தில் மணப்பெண்கள் மாறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.