ஷூட்டிங்கில் டைரக்டர் – டி.ராஜேந்தர்

தன்னுடைய படங்களின் தலைப்பில்  எல்லாம் மறக்காமல் ஒரு இ’யைச் சேர்த்துக் கொள்கிறார் டைரக்டர் டி. ராஜேந்தர்! (‘இரயில் பயணங்களில் ‘இராகம் தேடும் பல்லவி’.)  

” ‘ர’கரத்தில் ஆரம்பமாகும் தமிழ்ச் சொற்களுக்கு முன்னால் ‘இ’ வந்தே தீர வேண்டும் என்ற இலக்கணத்தை நான் பின்பற்றுகிறேன். . ” என்று சொன்ன டைரக்டரின் பெயரில் மட்டும் ‘இ’ கிடையாது! காரணம் கேட்டபோது, “ஆரம்பத்திலிருந்தே மற்றவர்கள் போடாமல் இருந்து விட்டார்கள்!’ என்று பழி சுமத்துகிறார்.  

க்ரீம்ஸ் ரோடிலுள்ள ஸ்ரீலங்கா தூதரக அலுவலகத்தின் எதிரிலுள்ள பாட்யாலா ஹவுஸில், ‘இராகம் தேடும் பல்லவி‘க்காக சில காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார் (இ) ராஜேந்தர்!  

டி.ராஜேந்தர்

வீட்டுச் சொந்தக்காரர்கள் இருக்க இடம் கிடைக்காமல் அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டிருக்க, படப்பிடிப்புக் குழு ஏகப்பட்ட தட்டு முட்டு சாமான்களுடன் பாட்யாலா ஹவுஸை முற்றுகையிட்டு பரபரத்துக் கொண்டிருந்தது!

(சினிமா எடுப்பதற்காகவே இந்த வீடு வாடகைக்கு விடப்படுகிறதாம்!)  அடர்த்தியான தாடி மீசையும், படியாத பரட்டைத் தலையும் தனித்து நின்று ராஜேந்தரை அடையாளம் காட்டுகின்றன.

எட்டு வீட்டுக்குக் கேட்கும்படியான உரத்த குரல் இவருக்கு! நடிப்புச் சொல்லித் தரும் போதும், காட்சியை விளக்கும் போதும் அஷ்ட  கோணலில் அபிநயம் பிடிக்கிறார்! குறுக்கும் நெடுக்குமாக ஒடிக்கொண்டிருக்கிறார்!  சில்க் ஜிப்பா, வேஷ்டி ப்ளஸ் ஜரிகை அங்கவஸ்திரத்துடன் சம்மணம் போட்டு தரையில் உட்கார்ந்திருந்தார் கல்லாப் பெட்டி சிங்காரம்.

அப்போது எடுக்கப்பட்ட நகைச்சுவைக் காட்சிக்கு நாயகன் அவர்! பல மொழிக் கலவைகளில் அவர் வசனம் பேச, சங்கர், ராஜீவ் இருவரும் எதிரில் சோபாவில் உட்கார்ந்து கொண்டு சிங்காரத்திடம் செம்மையாக ‘அறு’பட்டுக் கொண்டிருந்தார்கள்! 

ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம் (‘அன்னக்கிளி’புகழ்!) இன்னொரு சோபாவில் உட்கார்ந்து கொண்டு தன்னுடைய உதவியாளர்கள் மூலமாக காமிராவை இயக்கிக் கொண்டிருந்தார். தரையில் ஒரு சின்ன மணை மீது  காமிரா ஒய்யாரமாக உட்கார்ந்திருந்தது! “டேய் ராஜசேகர். . . . (ராஜீவை  இப்படித்தான் அழைக்கிறார் ராஜேந்தர்!) “யோவ் . . வெத்தலைப் பெட்டி . . . .

இன்னிக்கு“னு நீ தொடங்கறே. .’ என்று அவருக்கு ‘க்ளூ’ தந்துவிட்டு,”அவ கண் இருக்கே… அது திராட்சைப்பழம் . . மூக்கு இருக்கே, அது முந்திரிப்பழம்… அவ கன்னம் இருக்கே, அது ஆப்பிள் பழம். .” ‘அண்ணே’ என்று அழைக்கப்பட்ட சிங்காரத்திடம் இந்த வசனத்தைக் கிட்டத்தட்ட பத்து தடவை பேசிக்காட்டினார் ராஜேந்தர்.

அப்படியும் “டேக்’கின் போது ஆப்பிள், பலாவாக மாறிவிட்டது! இதற்காகக் கல்லாபெட்டி வருத்தப்பட்டு இன்னொரு ‘டேக்”கிற்காக அனுமதி கேட்டபோது, “பரவாயில்லை… நோ பிராப்ளம் , ‘ என்றார் டைரக்டர்.  

அதைத் தொடர்ந்து, மறைந்த நடிகர் பாலையாவின் பாணியில் ராஜேந்தர் இந்த வசனத்தை ‘மிமிக்ரி செய்து காட்ட, சுற்றிலும் ஒரே சிரிப்பு!  இந்தக் காட்சியைப் பொறுத்தவரை முன்கூட்டியே முழு வசனங்களையும் எழுதி வைக்காமல், ஒவ்வொரு தடவை நடித்துக் காட்டும் போதும் புதுப்புது வார்த்தைகளைச் சேர்த்துக் கொண்டே போனார் ராஜேந்தர். “இப்போ நான் சொல்றதை எழுதிக்குங்க…. இல்லாட்டி பின்னாலே டப்பிங்லே பிராப்ளமா போயிடும்….” என்று தன் உதவியாளரிடம் வேறு சொல்லிக் கொண்டிருந்தார்.  

காட்சி எடுக்கப்பட்டதும் டைரக்டரின் அருகில் இந்தப் படத்தின் கதாநாயகி அனு வந்தார்.“இந்த சீன் நல்லா வந்திருக்கு ஸார்… ரொம்ப சிரிப்பா இருக்கும் ஸார்….” என்றார். (பிழைத்துக் கொள்வார்!)

டி.ராஜேந்தர்

இன்னொரு சின்ன ரூமுக்கு காமிரா டிரான்ஸ்பர் ஆனது. அங்கிருந்த டீபாயின் கண்ணாடிக்குள் சங்கரின் முகம் ரிஃப்ளெக்ட் ஆக வேண்டும் என்ற டைரக்டரின் ஆசையைப் பூர்த்தி செய்ய அங்கு ஒரு சீரியஸ் டிஸ்கஷனே நடந்தது!

பிறகு சங்கர் – ராஜீவ் சம்பந்தப்பட்ட ஒரு காட்சி எடுத்து முடிப்பதற்குள் மாலை 6 மணி ஆகிவிட்டது. இரவு ஒன்பது மணி வரை தொடரப்போகும் படப்பிடிப்புக்கு டிபன் பிரேக் அறிவிக்கப்பட்டது.  

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, டைரக்ஷன் என்று ஏராளமான பொறுப்புகளை ராஜேந்தரால் எப்படிச் சமாளிக்க முடிகிறது?  “இத்தனை வேலைன்னு நினைக்கறதே தப்பு… நம்ப மூளை கம்ப்யூட்டர் மாதிரி..

இன்னும் நிறைய லோடுகளை அது தாங்கும் . . . . ” என்றார் ராஜேந்தர் இவருக்கு வயது 25!“சினிமான்னு புகுந்துட்டா ஒருத்தனுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கணும்…

இன்னும் காமிராவும், எடிட்டிங்கும்கத்துக்கலேயேன்னு நான் குறைப்பட்டுக்கிட்டிருக்கேன்!” என்றார் இந்த எம். ஏ. பட்டதாரி.  

– ஆனந்த்

(11.10.1981 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.