வெள்ளை ஈ தாக்குதலால் அழியும் தென்னை விவசாயம்; நாகை விவசாயிகள் புகார்!

தென்னைச்  சாகுபடியில் வெள்ளை நோய் தாக்குதலை தடுத்து நிறுத்த  வேளாண்துறை அதிகாரிகள் முன்வரவில்லையென  விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி, புஷ்பவனம், தலைஞாயிறு, தாமரைபுலம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை மரங்கள் இருந்தன. கஜா புயல் தாக்கத்தில் லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் அழிந்தது போக, தென்னை மரங்கள் கொஞ்சம்தான் எஞ்சியது. கஜா புயலால் பாதித்த தென்னை விவசாயிகளுக்கு சுமார் 3 லட்சம் தென்னங் கன்றுகளை அரசு இலவசமாக வழங்கியது. இதனை விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி மிகுந்த சிரமப்பட்டு தென்னங்கன்றுகளை நட்டு வளர்த்து வந்தனர்.

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல்

இந்தத் தென்னங்கன்றுகளையும் புயலுக்குப் பிறகு மிஞ்சிய ஒரு சில தென்னை மரங்களையும் கூன்வண்டு தாக்குதல் தற்போது கடுமையாக உள்ளது.

இந்தத் தாக்குதலில் அரசு வழங்கிய 3 லட்சம் தென்னைக் கன்றுகளில் சரிபாதி, வண்டுகள் தாக்குதலால் அழிந்துவிட்டன. தற்போது புதுவித நோயாக வெள்ளை ஈ நோய் தாக்குதல் தென்னை மரங்களைத் தாக்கத் தொடங்கியுள்ளது. வேதாரண்யம் தாலுகா முழுவதும் உள்ள தென்னை மரங்களில் இந்த நோய் பரவலாகத் தாக்கியுள்ளது. வெள்ளை நோய்த் தாக்குதலுக்கு உள்ளான தென்னை மரங்கள் ஆயிரக்கணக்கில் கருகிவிட்டன. இதனைக் காப்பாற்ற விவசாயிகள் பலமுறை வேளாண் அலுவலகத்துக்குச் சென்று கூறியும் அதிகாரிகள் விவசாயிகளை கண்டு கொள்வதே இல்லை. தாக்குதலுக்கு உள்ளான தென்னந்தோப்புகளை வேளாண்துறை அதிகாரிகள், இதுவரை வந்து பார்த்ததே இல்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் மீதமிருக்கும் மரங்களும் நோய் தாக்குதலுக்கு ஆளாகி பட்டுப்போய் வருகிறது. இந்த நோயிலிருந்து தென்னை மரங்கள் மீள்வதற்கு வாய்ப்பு இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கஜா புயல் தாக்குதலில் பொருளாதாரத்தை இழந்த விவசாயிகள் தென்னை மரங்களை வைத்து ஓரளவு குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கூன்வண்டு தாக்குதல், வெள்ளை ஈ நோய் தாக்குதலால் தென்னைச் சாகுபடி முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல்

இதுபற்றி தென்னை விவசாயிகளிடம் பேசியபோது, “தென்னந் தோட்டங்களை விவசாய துறையினர் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்கணும். தொடர்ந்து விவசாயிகளை அலட்சியப்படுத்தும்  வேளாண்  அதிகாரிகளைக்  கண்டித்து தென்னை விவசாயிகளான நாங்க, எங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை விவசாய அலுவலகத்தில் ஒப்படைத்து மிகப்பெரிய முற்றுகை போராட்டம் நடத்த இருக்கிறோம்” என்றனர்.

இதுகுறித்து வேதாரண்யம் வேளாண்துறை உதவி இயக்குனர் கருப்பையாவிடம் விளக்கம் கேட்டோம். “தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈ நோயைக் கட்டுப்படுத்த வாட்டர் ஸ்பிரேயர், விளக்கெண்ணெய் தடவிய மஞ்சள் அட்டைகளைப் பயன்படுத்துவது போன்ற விழிப்புணர்வு முகாம்களை நிறைய நடத்தி வருகிறோம். இதனை தென்னை மர விவசாயிகள் பின்பற்றினால் இந்த தாக்கத்திலிருந்து விடுபடலாம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.