தி.மு.க விஞ்ஞான ஊழல்; மகாபலிபுரத்தில் சட்டமன்றம் கட்ட விடமாட்டோம்: அண்ணாமலை

திமுக விஞ்ஞான ஊழல் அடிப்படையில், மகாபலிபுரத்தில் புதிய சட்டப்பேரவைக் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அங்கே சட்டப்பேரவைக் கட்டுவதற்கு ஒரு செங்கல்கூட வைக்க அனுமதிக்கமாட்டோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பழனியில் இன்று (மே 10) பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது: “தமிழகத்தின் சட்டப்பேரவையை மகாபலிபுரத்துக்கு கொண்டு செல்வதற்கு பணிகளை ஆரம்பித்திருக்கிறார்கள். அரசாணையையும் போட்டுவிட்டார்கள். இதில் முக்கியமாக, பாஜகவை சேர்ந்தவர்கள் குறை சொல்வார்கள் என்ற காரணத்தினால், அவர்கள் திருட்டுத்தனமாக சில வேலைகளை செய்துகொண்டிருக்கிறார்கள். அதிலே முக்கியமாக, திமுகவினுடைய அலுவலகம் அங்கே திறப்பதற்காக இடத்தை மகாபலிபுரம் பக்கத்தில் திமுக வாங்கியிருக்கிறது. திமுகவினுடைய 6 அமைச்சர்கள் 100 ஏக்கர்களுக்கு மேல் மகாபலிபுரத்தில் பினாமி பெயர்களில் சொத்தை வாங்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தினுடைய புதிய சட்டமன்றம் மகாபலிபுரத்தில் 6,000 ஏக்கர் பரப்பளவில் அமைப்பதற்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம். இதன் மூலம், தமிழக மக்களை முட்டாளாக்கி பணம் சம்பாதிப்பதற்காக, விஞ்ஞான ஊழல் அடிப்படையில் திமுக இதை கையிலெடுக்கிறது. மறுபடியும் சொல்கிறோம், எப்படி லுலு மாலின் ஒரு செங்கல்லைக்கூட அங்கே வைப்பதற்கு அனுமதி கொடுக்கமாட்டோமோ, பாஜக தமிழக மக்களுடன் இணைந்து புதிய சட்டமன்றம் கட்டுவதற்கு அங்கே ஒரு செங்கல்லை வைப்பதற்குகூட நாங்கள் அனுமதிக்கமாட்டோம். ஏனென்றால், ஒரு குடும்பத்தில் இருக்கக்கூடிய 4 பேர் சம்பாதிப்பதற்காக சட்டமன்றத்தை மகாபலிபுரத்துக்கு மாற்ற வேண்டும் என்று ரகசியமாக திமுக திட்டம்பொட்டுக்கொண்டிருக்கிறது. அதனால், மகாபலிபுரத்தில் புதிய சட்டமன்றம் கட்டுவதற்கு அறிப்பு வரலாம்.” என்று கூறினார்.

அண்மையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மிகவும் ஆபத்தான இயக்கம் என்று பயங்கரமாக கூறியுள்ளாரே அதைப்பற்றி தங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “ஆளுநர் பயங்கரமாக சொல்லவில்லை. களநிலவரத்தை உண்மையாக சொல்லியிருக்கிறார். ஏனென்றால், ஆளுநர் உளவுத்துறையில் 35 ஆண்டுகள் இருந்த ஒரு அதிகாரி. நாகலாந்து மாநிலத்தில் கவர்னராக இருந்தவர். குறிப்பாக உள்துறையைப் பற்றித் தெரிந்தவர். அப்படிப்பட்ட மனிதர் கருத்து சொல்லும்போது, ஆளுநரை தாக்கிப் பேசுவது எந்த விதத்தில், நியாயம். ஆளுநர் அவருடைய நிர்வாக அனுபவத்தை வைத்து அந்த கருத்த சொல்லியிருக்கிறார். குறிப்பாக, கேரளாவில், பிஎஃப்ஐ (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மற்றும் எஸ்.டி.பி.ஐ-யின் குற்றங்கள், அவர்கள் செய்திருக்கக்கூடிய குற்றங்களின் வழக்கைப் பாருங்கள்

பாதுகாப்பு பற்றி தெரிந்தவர்கள், பி.எஃப்.ஐ பற்றி ஆளுநர் சொன்ன கருத்து தவறு என்று யாருமே சொல்ல மாட்டார்கள். ஆனால், இங்கே, மதத்தை வைத்து குளிர்காய வேண்டும் என்று நினைக்கக்கூடிய தலைவர்கள் ஆளுநருக்கு எதிராகப் பேசுகிறார்கள் என்றால் அதற்காக நாம் என்ன செய்ய முடியும்?” என்று கூறினார்.

ஆதீனம் பட்டினப் பிரவேசம் சர்ச்சை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “பழனிமலை முருகப்பெருமான் சன்னதியில் இருந்து பேசுகிறேன். 500 ஆண்டுகளாக ஒரு மரபு இருக்கிறது. தமிழ்நாட்டினுடைய கலாச்சாரம் அது. ஆதீனத்தை யாரும் மனிதர்களாகப் பார்ப்பது இல்லை. ஆதீனத்தை தமிழகத்தினுடைய கலாச்சாரமாகப் பார்க்கிறோம். ஆதீனத்தினுடைய பெயர் என்ன என்பது முக்கியம் கிடையாது. இந்த ஆதீனத்துக்கு முன்னாடி எத்தனை பேர் இருந்தார்கள் என்பது முக்கியம் கிடையாது. இந்த ஆதீனத்துக்கு பின்னாடி எத்தனை பேர் வருகிறார்கள் என்பது முக்கியம் கிடையாது. ஆதீனம் என்பது ஒரு நிறுவனம், ஒரு மரபு, ஒரு கலாச்சாரம். அந்த கலாச்சாரம் பேணிக் காக்க வேண்டும் என்பதற்காகத்தான், பாஜக குறிப்பாக நான் அங்கே இருந்து ஆதீனத்தை சுமக்கத் தயாராக இருக்கிறேன் என்று கூறினேன். கோயிலில் உற்சவ மூர்த்தியை நாம் அனைவரும் சுமக்கின்றோம். தினமும் நடக்கிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று செல்லும்போது, குரு தெய்வத்துக்கு முன்னாடி வருகிறார். குரு என்பவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இதே நம்ம சென்னையில், டிஜிபியாக இருந்த திரிபாதி ஓய்வுபெற்றபோது, அவரை காரில் உட்கார வைத்து ஐ.பி.எஸ் அதிகாரிகள் இழுத்துக்கொண்டு போனார்கள். அதை நானும் செய்திருக்கின்றேன். காவல் துறை அதிகாரியாக இருந்தபோது, ஓய்வு பெற்றால், நம்முடைய டிரைவரோ, கான்ஸ்டபிளோ, அரசு வாகனத்தில் உட்கார வைத்து இழுத்துக்கொண்டு செல்வார்கள். அதற்கு காரணம் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் இழுக்கிறான் என்பதில்லை. அந்த மனிதனுக்கு இன்னொரு மனித மரியாதை கொடுக்கிறான் என்று அர்த்தம். இது திமுகவுக்கு புரியாது. உதயநிதி ஸ்டாலின் போகிற காரில் 100 பேர் தொற்றிக்கொண்டு போகிறார்கள். அவர்களுக்கு எப்படி தன்மானத்தைப் பற்றி இதைப் பற்றி எப்படி தெரியும். உதயநிதி ஸ்டாலின் போகிற பிரச்சார வேனில், உலக சாதனையாக 100 பேர் தொற்றிக்கொண்டு போகிறார்கள். எந்த அமைச்சரும் போட்டிக்கொண்டு, நீ அதிகமாக தொற்றிகொண்டு செல்கிறாயா, நான் அதிகமாக தொற்றிகொண்டு செல்கிறானா என்று பேசும் சுயமரியாதையைப் பற்றி பேசுவது வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.