மொஹாலியில் உள்ள பஞ்சாப் காவல்துறையின் உளவுத்துறை அலுவலகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டு வீசப்பட்டதாகவும், அதில் அலுவலகத்தின் ஜன்னல்கள் உடைந்து சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பஞ்சாப் உளவுத்துறை அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பஞ்சாப் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். அதன் காரணமாக அந்தப் பகுதியில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். உயரதிகாரிகள் பலரும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென காவல்துறையிடம் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், “பஞ்சாப்பின் அமைதியான சூழலைக் கெடுக்க முயலும் யாரும் தப்பிக்க முடியாது” என்றும் எச்சரித்திருக்கிறார்.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “இந்த மொஹாலி வெடிகுண்டுத் தாக்குதல் என்பது பஞ்சாப் மாநிலத்தின் பொது அமைதியைச் சீர்குலைக்க நினைப்பவர்களின் கோழைத்தனமான செயல். அவர்களின் விருப்பத்தை பஞ்சாப் அரசு நிறைவேற்ற அனுமதிக்காது. பஞ்சாப் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு, எல்லா சூழ்நிலையிலும் அமைதி காக்கப்படும். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.