பெங்களூரு:’பொது இடங்களில், காலை 6:00 முதல் 10:00 மணி வரையிலும்; இரவில் 10:00 மணியில் இருந்து அடுத்த நாள் காலை 6:00 மணி வரையிலும் ஒலிபெருக்கி பயன்படுத்த கூடாது’ என கர்நாடக தலைமை செயலர் ரவிகுமார் உத்தரவிட்டார்.
பொது இடங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது தொடர்பாக கர்நாடக அரசு விதிமுறைகள் அறிவித்து, அதை முறையாக அமல்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, கர்நாடக தலைமை செயலர் ரவிகுமார் நேற்று வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார்.அதில் குறிப்பிட்டுள்ளதாவது:உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகள்படி ஒலிபெருக்கி பயன்பாட்டுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.
ஒலி மாசு கட்டுப்பாட்டு விதிகள், 2000, விதி 3(1) கீழ் குறிப்பிட்டுள்ளது போன்று, காலை 6:00 மணி முதல் காலை 10:00 மணி வரையிலும்; இரவில் 10:00 மணியில் இருந்து அடுத்த நாள் காலை 6:00 மணி வரையிலும் பொது இடங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த கூடாது.மற்ற நேரத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்த சம்பந்தப்பட்டோரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
பொது இடங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்துவோர், 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டோரிடம் எழுத்து பூர்வமாக அனுமதியை பெற வேண்டும்.அனைத்து போலீஸ் கமிஷனரேட் பகுதிகளில், உதவி போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட செயற் பொறியாளர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய பிரதிநிதியும்; மற்ற பகுதிகளில் டி.எஸ்.பி., தாசில்தாருக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement