புதுடெல்லி: நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்துக்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாகவும், அந்த மாநிலங்களில் அவர்களை சிறுபான்மையினராக வகைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், ‘‘இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டிய முழு அதிகாரமும் மாநிலங்களுக்கு கிடையாது. இதுதொடர்பாக புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளோம்,’’ என்றார்.இதைக் கேட்ட நீதிபதிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். பின்னர் அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: நீதிமன்றத்தில் ஒரு விஷயத்தை தாக்கல் செய்வதற்கு முன்னதாக தெளிவாக ஆலோசித்து முன்வைக்க வேண்டும். பிற சமூகத்தை விட எண்ணிக்கையில் குறைவாக உள்ள இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மாநிலங்களுடன் கலந்து ஆலோசிக்க விரும்பினால், அவ்வாறு உடனடியாக செய்து ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டியது தானே? மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி ஒரு முடிவுக்கு வர ஒன்றிய அரசுக்கு மூன்று மாதம் கால அவகாசம் வழங்குகிறோம் என உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.