கொழும்பு:
பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வந்த இலங்கை மக்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அதிபர் மற்றும் பிரதமர் பதவிகளில் உள்ள ராஜபக்சே குடும்பத்தினர் பதவியில் இருந்து விலகவேண்டும் என அவர்கள் வலியறுத்தினர்.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கு இடையே நேற்று ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.
இதில் மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியைச் சேர்ந்த சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
பேருந்துகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடைபெற்றன. போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில், இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. நாளை மறுநாள் காலை 7 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் இலங்கை முழுவதும் நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்…தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்- விக்னேஸ்வரன் எம்.பி. அறிக்கை