கஞ்சா விற்பனை செய்பவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என்று, அறிவிப்பை இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் உரையில், “கஞ்சா மற்றும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால், சமூகத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் எதிர்கால சந்ததியினருக்கு நேரக்கூடிய பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தப் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோருக்கு போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதுதவிர, இக்குற்றங்களில் ஈடுபடுவோர், அவர்களது கூட்டாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் இருக்கக்கூடிய அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த அரசு குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகளை வரும் நாட்களில் எடுக்கும் என்ற உறுதியை இந்த அவைக்குத் தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.