மகிந்தவை உடன் கைதுசெய்ய வேண்டும் – மைத்திரிபால சிறிசேன கோரிக்கை



அமைதியான மற்றும் நியாயமான மக்களின் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ ஆகியோரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

சுயாதீன நாடாளுமன்ற கட்சிகள் மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியவர்கள் பேருந்துகளில் இருந்து தடிகளை எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். தேர்தல் காலத்தில்கூட வன்முறையில் ஈடுபட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் அலரிமாளிகையில் இருந்து காலிமுகத்திடலுக்குச் சென்றுள்ளனர்.

மனித உரிமை மீறல் விடயத்தில் அரசு இருக்க வேண்டிய இடத்தில் சிக்கியுள்ளது. இவ்வாறானதொரு நிலை ஏற்படும் என ஆறு மாதங்களுக்கு முன்னரே கூறியிருந்தேன். ஆனால், அரசு அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.

முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் இரண்டு வாரங்களுக்கு முன்னரே புதிய அரசு அமைக்கப்பட்டிருக்கும். அவ்வாறு இருந்திருந்தால் இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தவிர்க்கப்பட்டிருக்கும்.

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டிப் பெரும்பான்மைப் பலமுள்ள ஒருவரைப் பிரதமராக நியமித்து, அரசை அமைத்து, நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.