கீவ்: உக்ரைனின் ஒடேசா நகரம் மீது ஹைப்பர்சானிக் ஏவுகணை மூலம் ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி தொடங்கிய போர் 2 மாதங்களைத் தாண்டியும் நீடித்தபடி உள்ளது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல், தலைநகரான கீவ் ஆகியவை முற்றிலும் உருக்குலைந்து போய் உள்ளன. சில நாட்கள் முன்பு மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்தது.
அப்போது, மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்காலையில் உக்ரைன் வீரர்கள், பொதுமக்கள் தஞ்சம் அடைந்தனர். சரண் அடைய ரஷ்யா விடுத்த உத்தரவை உக்ரைன் வீரர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
அசோவ்ஸ்டல் உருக்காலையில் சிக்கி இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரஷ்யாவை உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தின.
ஐ.நா.சபை, செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இணைந்து மீட்பு நடவடிக்கையை ஒரு வாரத்துக்கு முன்பு தொடங்கின. இதைத் தொடர்ந்து உருக்காலையில் இருந்து பொதுமக்கள் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில் உக்ரைனின் ஒடேசா நகரம் மீது ரஷ்ய ராணுவம் ஹைப்பர்சானிக் ஏவுகணை மூலம் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஹைப்பர்சானிக் ஏவுகணை வகைகள் ஒலியைவிட குறைந்தது 5 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியவை ஆகும்.
நேற்று முன்தினம் இரவு முதல் இந்தத் தாக்குதலை ரஷ்யா நடத்திவருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கருங்கடல் பகுதியில் துறைமுக நகரமான ஒடேசா நகரம் அமைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த மார்ச்சில் கார்கிவ் நகரிலுள்ள இஸியும் பகுதியில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 மாடிக் கட்டிடம் தரைமட்டமானது. அந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து 44 பொதுமக்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரி ஒலே சைனேஹுபோவ் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய மற்றொரு மோசமான போர்க் குற்றமாகும் இது” என்றார்.
ஒருவர் உயிரிழப்பு
நேற்று நடந்த தாக்குதல் குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “நேற்று ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் வணிக வளாகம், கிடங்கு உள்ளிட்டவை சேதமடைந்தன. இதில் ஒருவர் இறந்தார். 5 பேர் காயமடைந்தனர். 3 ஹைப்பர்சானிக் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இவை கின்சால் வகை ஹைப்பர்சானிக் ஏவுகணைகளாகும். 2 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய இவை, ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடியதாகும்’’ என்று தெரிவித்தார்.