திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே மேனகா நகர் பகுதியில், `வைரம் அப்பார்ட்மென்ட்ஸ்’ என்னும் குடியிருப்பு உள்ளது. 20 வீடுகளைக் கொண்ட இந்த அப்பார்ட்மென்ட்டில் 16 வீடுகள் விற்பனையாகிவிட, 4 வீடுகள் மட்டும் விற்பனையாகாமல் இருந்துள்ளது. இதனைத் தெரியப்படுத்தும் விதமாக வைரம் அப்பார்ட்மென்ட்டின் உரிமையாளர், பிரமாண்டமான பிளக்ஸ் போர்டு ஒன்றினை, அப்பார்ட்மென்ட் முன்பிருந்த டிரான்ஸ்பார்மர் அருகே வைத்திருந்தார். நேற்று முந்தினம் பெய்த மழை மற்றும் காற்றினால் காலை அந்த பேனர் கழன்று சாலையில் சரிந்து விழுந்தது.
அதையடுத்து கீழே விழுந்து கிடந்த பேனரை தூக்குவதற்காக அப்பார்ட்மென்ட்டின் வாட்ச்மேன் செல்லதுரை, அப்பார்ட்மென்டுக்கு பெயின்ட் அடிக்க வந்த சேட்டு மற்றும் விமல்நாத் ஆகிய இருவரை உதவிக்கு அழைத்துள்ளார். மூவரும் சேர்ந்து கீழே விழுந்து கிடந்த பேனரை தூக்கும் போது, எதிர்பாராதவிதமாக பேனரில் இருந்த இரும்புக் கம்பி மின்கம்பியில் உரசியிருக்கிறது. அதில் மூன்று பேர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர்.
இதில் அப்பார்ட்மென்ட் வாட்ச்மேன் செல்லதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெயின்டரான வாத்தலை பகுதியைச் சேர்ந்த சேட்டு என்பவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விமல்நாத் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விவகாரம் குறித்து கொள்ளிடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அப்பார்ட்மென்ட் உரிமையாளர் அந்த பேனரை அனுமதியின்றி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.