தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான அசானி புயல், வங்க கடல் பகுதியிலிருந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நேற்று இரவு நிலவியது.
இது வடக்கு-வடகிழக்கு திசையில் வடக்கு ஆந்திரா-ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும் என்றும் இன்றோ அல்லது நாளையோ புயலாக வலுவிழக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 14ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.