காரைக்காலில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் தேதி காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து காணாமல் போனதாக அப்பெண்ணின் பெற்றோர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்த சிறுமி திருவாரூர் மாவட்டம் நடப்பூர் கிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்குச் சென்றபோது அப்பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞருடன் ஏற்பட்ட பழக்கத்தில் அவனுடன் அடிக்கடி செல்போனில் பேசியதும் தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் தேதி அன்று காரைக்கால் வந்த சதீஷ் சிறுமியை செல்போனில் தொடர்பு கொண்டு காரைக்கால் பேருந்து நிலையத்திற்கு வரவழைத்து கடத்திச் சென்றுள்ளார். சிறுமியை கடத்தி சென்ற சதீஷ் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து தாலிகட்டி திருமணம் செய்ததுடன் அங்கிருந்து தப்பிச்சென்று வேறு பகுதியில் சிறுமியுடன் குடித்தனம் நடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில், சதீஷின் செல்போன் எண்ணை தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார் கடந்த வாரம் சதீஷ் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை அருகே உள்ள கருங்குளம் கிராமத்திலிருந்து போன் அழைப்பு சென்றதை அறிந்த தனிப்படை போலீசார் சிவகங்கை மாவட்டம் விரைந்தனர். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை அருகே உள்ள கருங்குளம் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணை பகுதியில் பதுங்கியிருந்த சதீஷ் மற்றும் சிறுமியை காரைக்காலுக்கு அழைத்து வந்தனர்.
இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார், மருத்துவ பரிசோதனைக்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த சதீஷ் மீது சிறுமியை கடத்தி திருமணம் செய்த குற்றம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த பிரிவுகளில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM