இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் 3-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் பொதுமக்கள் போராட்டங்களை கைவிட்டு அமைதி காக்க வேண்டி அதிபர் கோத்தபய உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் கொதித்தெழுந்த மக்கள், முன்னாள் பிரதமர் ராஜபக்ச, எம்.பி.க்கள், ஆளும்கட்சிப் பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களை அடித்து நொறுக்கியும், தீவைத்து கொளுத்தியும் வருகின்றனர். Tangalle-ல் இருந்த ராஜபக்சே சகோதரர்களின் தந்தை டான் ஆல்வின் ராஜபக்சேவின் சிலையை போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தினர்.
கலவரம் மற்றும் போராட்டங்களை கட்டுப்படுத்த போலீசாருடன், ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள், மற்றும் தடையை மீறி போராட்டம், கலவரத்தில் ஈடுபடுபவர்களை சுட்டுத் தள்ள முப்படைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், நாளை வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அங்கோடா உள்ளிட்ட பகுதிகளில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க வானை நோக்கி ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இலங்கையில், இரண்டே நாட்களில் வன்முறைக்கு 8 பேர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ரத்காமா பகுதியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்தனர்.
பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் இன்று நடக்க இருந்த எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அரசியல் தலைவர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
ராஜபக்சே குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, Hingurakgoda விமானப் படை தளம், திரிகோணமலை கடற்படை தளம், மற்ற வர்த்தக விமான நிலையங்களை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராஜபக்சே குடும்பத்தினர் உள்ளிட்ட சிலர் இந்தியா தப்பிவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இந்த தகவல் வதந்தி என கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, மக்கள் வன்முறை போராட்டங்களை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என அதிபர் கோத்தபய ராஜபக்சே, வலியுறுத்தி உள்ளார்.
ராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையிலான வன்முறைகளை மக்கள் கைவிட வேண்டும் என முன்னாள் அதிபர் சந்திரிகா உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.