சென்னை: தமிழக சட்டப்பேரவை தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16-வது தமிழக சட்டப்பேரவையின் 3-வது கூட்டம் மார்ச் 18-ம்தேதி தொடங்கியது. அன்று பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், மறுநாள் வேளாண் பட்ஜெட்டை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர்.
பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் 3 நாட்கள் நடந்தது. விவாதங்களுக்கு நிதி அமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் பதில் அளித்தனர்.
துறைவாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஏப்.6தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகள், கோரிக்கைகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்ததுடன், பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டனர். இந்த கூட்டத்தொடரில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்டம்,மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்டம் உள்ளிட்ட24-க்கும் மேற்பட்ட சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து, பேரவையை ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் நேற்று கொண்டு வந்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் இத்தீர்மானம் நிறைவேறியதும், தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.