டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதும், அவர்கள் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்பார்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதி பணியிடங்கள் 75. ஆனால், 60 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 45 நிரந்தர நீதிபதிகள் மற்றும் 15 கூடுதல் நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் 12 பேர் அடுத்த ஓராண்டில் ஓய்வு பெற உள்ளனர்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள கோவிந்தராஜுலு, சந்திரசேகரன்,வீராசாமி சிவஞானம், கணேசன் இளங்கோவன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சதிகுமார் சுகுமார குரூப், முரளிசங்கர் குப்புராஜு, மஞ்சுளா ராம்ராஜு நல்லையா, தமிழ்ச்செல்வி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிப்பதற்கான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன் மேலும் கூடுதல் நீதிபதியாக உள்ள ஏ.ஏ.நக்கீரனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்கவும் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரை குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தும், அவர்கள் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்பார்கள்.