கடும் வெயில் வாட்டும் வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. காற்றின் தாக்கத்தினால், ஒரு சில இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. கே.வி.குப்பம் அருகேயுள்ள மேல்மாயில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலிருக்கும் ஒன்பதாவது தெருவின் சாலையோரத்தில் மின்கம்பி அறுந்து கிடந்தது. இரவு நேரம் என்பதால் அப்பகுதி மக்கள் யாரும் கவனிக்கவில்லை. இன்று விடியற்காலை 4 மணியளவில், அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயதாகும் சாந்தி என்ற பெண் அந்த வழியாக சென்றிருக்கிறார். அப்போது, அறுந்து கிடந்த மின்கம்பியை கையால் எடுத்துள்ளார். இதில், மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
மின்கம்பியை பிடித்தபடியே அவர் இறந்து கிடந்ததைப் பார்த்து, அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கே.வி.குப்பம் போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ‘‘மழைக் காலங்களில் மின்கம்பங்கள் அருகில் நிற்க வேண்டாம். அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை யாரும் தொடக் கூடாது. உடனடியாக மின்வாரிய அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளை வீதியில் விளையாட விடும்போது, பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்’’ என காவல்துறையினர் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.