பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாளான செவ்வாய்கிழமை சட்டசபையில் 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 6 தொடங்கி மே 11 வரை வரை 22 நாட்கள் நடைபெற்றது. கூட்டத்தொடரின் நிறைவு நாளை நேற்று மட்டும், 20 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கே வழங்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து’ 1976 -1998 காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்டு வழக்கிழந்த 91 சட்டங்களை நீக்குவதற்கான நீக்கறவு மசோதாவை அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் பரிந்துரையின்படி இது செய்யப்பட்டது.
கிராம ஊராட்சி செயலர்களை இடமாற்றம் செய்யும் சட்ட மசோதா, ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரி நியமிக்கும் சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் பெரியகருப்பன் அறிமுகம் செய்தார்.
குண்டர் சட்டம், 1982- திருத்த மசோதா, இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள காவலர்களுக்கு தற்காலிக விடுப்பு வழங்கும் நடைமுறையை எளிதாக்கும். காவல் ஆணையர் அல்லது மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு தற்காலிக விடுப்பில் விடுவிக்க அதிகாரம் அளிக்கும் சட்டத்தின் 15வது பிரிவில்’ புதிய விதியைச் சேர்த்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நிறைவேற்றப்பட்ட மசோதா, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தனியார் துறையினரின் பங்கேற்புக்கு வழிவகுக்கும்.
இதுதவிர, அடுக்குமாடி குடியிருப்பு சொத்துரிமை மசோதா, தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி ,தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாடு திருத்த சட்ட மசோதாக்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மாநில ஆணைய திருத்தம் மொத்தம் 20 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
இதில் 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதாவும், சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவும் ஏற்கனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், (நேற்று மே.11) நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களும் ஓரிரு நாட்களில், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“