சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் ‘உதய்’ திட்டம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களினால் ரூ.18,629 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று, சிஏஜி எனப்படும் இந்திய கணக்காய்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையின் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் கடந்த 22 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் (மே 10ந்தேதி) முடிவடைந்தது. நேற்றைய அமர்வில் முதல்வர் ஸ்டாலின் விரிவான உரையாற்றினார். மேலும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்கள் 67, சட்டமுறைக் கழகம் 1, அரசு கட்டுப்பாட்டில் உள்ள பிற நிறுவனங்கள் 9 என மொத்தம் 77 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன.
31 பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த இழப்பான ₹18,629.83 கோடியில் எரிசக்தித்துறையில் உள்ள 3 பொதுத்துறை நிறுவனங்களால் மட்டும் ₹13,040.40 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
2019-20ம் ஆண்டில் ₹100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களாக 10 நிறுவனங்கள் பட்டியல் உள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நிகர இழப்பாக ₹11,964.93 கோடி, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ₹1,074.48 கோடி நிகர இழப்பு என 2 மின் துறை சார்ந்த நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.
மின்திட்டங்களில் அதிகபட்ச இழப்புக்கு உதய் திட்டமும் காரணம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மத்தியஅரசின் உதய் திட்டத்தில் தமிழக அரசு இணைந்ததால், தமிழகஅரசுக்கு எந்தவொரு பயனும் இல்லை என்றும், இணைந்த பிறகு டான்ஜெட்கோவின் கடன் 52 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது, ரூ.1,23,895 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
போக்குவரத்துக் கழகங்களில் 8 நிறுவனங்களும் பட்டியலிடப்பட்டுள்ளது. 8 போக்குவரத்துக்கழகங்களின் நிகர இழப்பு ₹5,230.58 கோடியில், கும்பகோணம் போக்குவரத்துக்கழகத்தில் அதிக அளவாக ₹898.82 கோடி நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது.